இன்று உலக கருணை தினம்: கருணை உள்ளங்களை போற்றுவோம்..!

உலக கருணை தினம் என்பது சமூகத்தில் நல்ல செயல்களை முன்னிலைப்படுத்துகிறது.

Update: 2024-11-13 08:14 GMT

அடுத்தவரின் துயரத்தில் பங்கெடுத்து அவர்களுக்கு ஆதரவாக இருப்பதுடன், அவர்களின் துயர் துடைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவது கருணை ஆகும். தன்னலமின்றி பிறருக்கு கருணை காட்டும் நபர்கள் எப்போதும் போற்றப்படுகிறார்கள்.

இதுபோன்ற கருணை உள்ளங்களை கவுரவித்து ஊக்குவிக்கும் வகையிலும், கருணை செயல்களை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் நவம்பர் 13-ம் தேதி உலக கருணை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த தினத்தை உலக கருணை இயக்கம் 1998-ல் தொடங்கியது. பல்வேறு நாடுகளில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, உலக கருணை இயக்கத்தின் (WKM) நோக்கம் "தனிநபர்களை ஊக்குவிப்பதும், நாடுகளை ஒன்றிணைத்து ஒரு கனிவான உலகத்தை உருவாக்குவதும் ஆகும்."

இந்த ஆண்டு இன்று (13.11.2024) உலக கருணை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இரக்கம், பச்சாதாபம், தாராள மனப்பான்மை மற்றும் தன்னலமற்ற செயல்களை செய்வதற்கு தனிநபர்களை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கருணையாளர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். கருணை செயல்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். விபத்து போன்ற சமயத்தில் பிறருக்கு உதவி செய்வதற்கு தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள், மனிதாபிமான உதவிகள் தொடர்பாகவும் பதிவிடுகின்றனர்.

 

உலக கருணை தினம் என்பது சமூகத்தில் நல்ல செயல்களை முன்னிலைப்படுத்துகிறது. கருணை தினத்தை கொண்டாட பல வழிகள் உள்ளன. நாம் சமூகத்தில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினால், அதற்கான பணிகளை இன்றே தொடங்கலாம். துயரத்தில் உள்ளவர்களுக்கு நேரடியாக சென்று உதவ முடியவில்லையே என்ற கவலை வேண்டாம். இப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் தன்னார்வ அமைப்புகளுக்கு தங்களால் முடிந்த நன்கொடையை வழங்கலாம். அந்த அமைப்புகளின் தன்னார்வ பணிகளில் இணைந்து செயல்படலாம்.

கருணை உணர்வோடு பிறருக்கு முடிந்த உதவிகளை செய்யும்போது கிடைக்கும் மன மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. கருணை காட்டுபவர்கள் மட்டுமின்றி அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மைகள் கிடைக்கும்.

உலக கருணை தினம் என்பது, கருணை பெறுபவருக்கு மட்டுமல்ல, கொடுப்பவருக்கும் எவ்வாறு நன்மை பயக்கும் என்பதை நினைவூட்டுகிறது. கருணை செயல்களானது மன அழுத்தத்தைக் குறைத்து திருப்தி உணர்வுகளை அதிகரிப்பதால் மனநலம் மேம்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கருணையுடன் செயல்படும்போது, நமது மூளையானது மகிழ்ச்சி  உணர்வுக்கான ஹார்மோன்களை வெளியிடுகிறது. எனவே, அன்பாக இருப்பது மற்றும் கருணை காட்டுவது மற்றவர்களுக்கு மட்டும் அல்லாமல், நமக்கும் நல்லது.

"பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்... அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்"

Tags:    

மேலும் செய்திகள்