மாற்றத்திற்கான தொடக்கம்.. புத்தாண்டின் முதல் 15 நாளில் பிரதமர் மேற்கொண்ட முக்கிய பணிகள்

வெறும் 15 நாட்களில், 2025-ம் ஆண்டின் மாற்றத்திற்கான தொடக்கத்தை பிரதமர் மோடியின் தலைமை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-01-16 20:42 IST

பிரதமர் நரேந்திர மோடி, 2025-ம் ஆண்டை மாற்றத்திற்குரிய அதிவிரைவான முன்முயற்சிகளுடன் தொடங்கியுள்ளார். முற்போக்கான, தற்சார்புள்ள, ஒன்றுபட்ட இந்தியாவுக்கான தமது தொலைநோக்குப் பார்வையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். உள்கட்டமைப்பு, அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்துவது முதல் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பது, இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுவது வரை, அவரது தலைமை, வரவிருக்கும் ஆண்டிற்கான குறிப்பிடத்தக்க மன உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

2025-ம் ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகள் நலனில் தீவிர கவனம் செலுத்தியதுடன் இந்த ஆண்டு தொடங்கியது. டை-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்திற்கான ஒருமுறை வழங்கும் சிறப்பு நிதியுதவி திட்டத்தை நீட்டிக்க அரசு ஒப்புதல் அளித்தது. இது விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரம் கிடைப்பதை உறுதி செய்கிறது. இந்த முடிவு இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை வலுப்படுத்தும் அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

கலை, விளையாட்டுகள், மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோரை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அதே நாளில், பாடகரும், நடிகருமான தில்ஜித் டோசன்ஜ், செஸ் கிராண்ட் மாஸ்டர் கொனேரு ஹம்பி போன்ற கலாச்சார ஆளுமைகளை பிரதமர் மோடி சந்தித்தார்.

ஆயிரக்கணக்கான குடும்பங்களின் சிறந்த வாழ்க்கை நிலையை உறுதி செய்ய ஜனவரி 3 அன்று, டெல்லியில் குடிசைகள் இருந்த அதே பகுதியில் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட 1,675 குடியிருப்புகளை பிரதமர் மோடி உரியவர்களிடம் ஒப்படைத்தார். சூரஜ்மல் விஹாரின் கிழக்கு வளாகம், துவாரகாவின் மேற்கு வளாகம், நஜாஃப்கரின் வீர் சாவர்க்கர் கல்லூரி உட்பட மாற்றத்தை ஏற்படுத்தும் ரூ. 600 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மூன்று கல்வித் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டங்கள் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும், எதிர்கால சந்ததியினரை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டவையாகும்.

ஜனவரி 4 அன்று நடைபெற்ற கிராமிய பாரத மகோத்சவமானது கிராமப்புற வளர்ச்சிக்கான அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது. இது ஜிஐ-சான்றளிக்கப்பட்ட கிராம தயாரிப்புகளை ஊக்குவித்து, கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தியது. இந்த முயற்சியானது கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதுடன் அதை உலகப் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைப்பது என்ற இலக்குடன் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெள்ளா உள்ளிட்ட உலகளாவிய தொழில்நுட்ப தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர்கள் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பில் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்தனர். இந்த உரையாடல் உள்நாட்டு கண்டுபிடிப்புகளை அதிகரிப்பதிலும், தற்சார்பு தொழில்நுட்ப சூழல் அமைப்பை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியது.

ஜனவரி 5 அன்று சாஹிபாபாத்தை அசோக் நகருடன் இணைக்கும் நமோ பாரத் ரெயில் வழித்தடத் தொடக்கம், ஒடிசா, தெலுங்கானா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பல ரெயில் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுடன் உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடக்கம் ஆகியன வேகம் பெற்றன. இந்த திட்டங்கள், பிரதமர் மோடி தலைமையின் கீழ் போக்குவரத்து வலைப்பின்னல்களை நவீனமாக்குவதில் இந்தியாவின் விரைவான முன்னேற்றத்தை அடையாளப்படுத்துகின்றன.

ஜனவரி 7 அன்று, இறக்குமதி செய்யப்பட்ட மருந்து பொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கு ரூ.1,877 கோடி மதிப்புள்ள பேரளவு மருந்து பூங்கா, நாளொன்றுக்கு 1,500 டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட பசுமை ஹைட்ரஜன் மையம் என்ற இரண்டு முக்கியமான திட்டங்களை ஆந்திராவில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த முயற்சிகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மருந்து உற்பத்தியில் இந்தியாவை முன்னோடியாக நிலைநிறுத்தும்.

ஜனவரி 9 அன்று ஜீனோம் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம் அறிவியலில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. இது இந்தியர்களின் மரபணு பன்முகத்தன்மையை வரைபடமாக்குகிறது; மரபணு கோளாறுகளுக்கான சுகாதாரத் தீர்வுகளை மேம்படுத்துகிறது. அதே நாளில், புவனேஸ்வரில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்திய புலம்பெயர்ந்தோரின் சாதனைகளையும், உலக அரங்கில் அவர்களின் பங்களிப்புகளையும் பிரதமர் பாராட்டினார் .

தேசிய இளைஞர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 12 அன்று நடைபெற்ற வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடலில் பிரதமர் மோடி பங்கேற்றார். இளம் கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்களை ஒருங்கிணைத்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கும், வளர்ச்சியடைந்த இந்தியாவை கற்பனை செய்வதற்குமான இந்த முன்முயற்சி இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்தியது.

ஜனவரி 13 அன்று, ஜம்மு-காஷ்மீரில் சோனாமார்க் சுரங்கப் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார், இது போக்குவரத்து இணைப்பையும், தேசப்பாதுகாப்பையும், சுற்றுலாவையும் மேம்படுத்துகிறது. தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடிய பிரதமர், அவர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். அன்று மாலை, இந்தியாவின் கலாச்சார ஒற்றுமையையும், பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் நடைபெற்ற லோஹ்ரி, பொங்கல், மகர சங்கராந்தி பண்டிகைகளை பல்வேறு சமூகங்களுடன் அவர் கொண்டாடினார்.

ஜனவரி 15-அன்று புதிய கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட மேம்பட்ட கப்பல்களை கடற்படையில் இணைத்ததன் மூலம் பிரதமர் மோடி மற்றொரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார். இது இந்தியாவின் அதிகரித்து வரும் கடல்சார் திறன்களை பிரதிபலிக்கிறது. இந்த இணைப்புகள் இந்தியப் பெருங்கடலில் ஒரு மேலாதிக்க சக்தியாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துகின்றன. மேலும் பாதுகாப்பில் தற்சார்பு இந்தியாவுக்கான அரசின் உறுதிப்பாட்டிற்கு இது ஒரு சான்றாகும்.

ஜனவரி 16 அன்று, செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் வெற்றிகரமான செயல்பாட்டுடன் இஸ்ரோவால் நிறைவு செய்யப்பட்ட திட்டத்தின் மூலம், இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கான பிரதமர் மோடியின் பார்வையானது மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு இது குறிப்பிடத்தக்க படிக்கட்டாக அமையும்.

வெறும் 15 நாட்களில், 2025-ம் ஆண்டின் மாற்றத்திற்கான தொடக்கத்தை பிரதமர் மோடியின் தலைமை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகள், உள்கட்டமைப்பு திட்டங்கள் முதல் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், கலாச்சார கொண்டாட்டங்கள் வரை, அவரது செயல்பாடுகள் வளர்ச்சியடைந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கின்றன.

"நாம் ஒன்றிணைந்து, வளர்ச்சியடைந்த இந்தியாவை வடிவமைக்கிறோம், அங்கு ஒவ்வொரு குடிமகனும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பார்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்