ஆக்ராவில் ரொட்டி தொழிற்சாலையில் பயங்கர விபத்து; 3 பேர் கவலைக்கிடம்
ஆக்ராவில் ரொட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.;
ஆக்ரா,
ஆக்ராவின் ஹரிபர்வத் பகுதியின் டிரான்ஸ்போர்ட் நகரில் ஒரு ரொட்டி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள பெரிய ஓவன் இன்று மதியம் திடீரென வெடித்து சிதறியது. இதில் தொழிற்சாலையில் இருந்த 13 தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக துணை காவல் ஆணையர் சூரஜ் ராய் கூறுகையில், டிரான்ஸ்போர்ட் நகரில் உள்ள ரொட்டி தொழிற்சாலையில் பெரிய ஓவன் வெடித்ததில் 13 பேர் காயமடைந்தனர். பலத்த வெடிச்சத்தத்தைக் கேட்டு, உள்ளூர்வாசிகள் தொழிற்சாலைக்கு ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது என்றார்.