மத்திய கிழக்கில் போர் பதற்றம்.. ஈரானின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை தாக்க இஸ்ரேல் திட்டம்?

Update:2024-10-01 22:44 IST
Live Updates - Page 4
2024-10-01 21:59 GMT

பாலஸ்தீன பகுதியில் விழுந்த ஈரான் ஏவுகணை

இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ஏவுகணை பாலஸ்தீனத்தின் மேற்குகரையில் உள்ள ரமெல்லா பகுதியில் விழுந்தது. 

2024-10-01 21:50 GMT

எங்களுடன் மோத வேண்டாம்: இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

எங்களுடன் மோத வேண்டாம் என இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் மக்களின் நலனை பாதுகாக்க இந்த நடவடிக்கை (இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்) எடுக்கப்பட்டது. ஈரான் போரை விரும்பவில்லை என நெதன்யாகு (இஸ்ரேல் பிரதமர்) புரிந்துகொள்ள வேண்டும். எங்களுடன் மோத வேண்டாம். ஆனால், எந்த அச்சுறுத்தல் வந்தாலும் ஈரான் வலிமையாக எதிர்கொள்ளும்’ என பதிவிட்டுள்ளார். 

2024-10-01 21:31 GMT

இஸ்ரேலின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் - ஈரான்

இஸ்ரேலின் 3 ராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் பாதுகாப்புப்படைப்பிரிவுகளில் ஒன்றான ஈரான் புரட்சிப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் முறையாக பதா ஹைப்பர் சோனிக் ஏவுகணை உள்ளிட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் 3 ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏவுகணை தாக்குதலின்போது சைபர் தாக்குதலும் நடத்தப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-10-01 21:06 GMT

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - ஹமாஸ் வரவேற்பு

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை ஹமாஸ் ஆயுதக்குழு வரவேற்றுள்ளது. காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஹமாஸ் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை ஹமாஸ் வரவேற்றுள்ளது. 

2024-10-01 20:59 GMT

மத்திய கிழக்கில் விரிவடையும் போர் பதற்றம் - ஐ.நா. கண்டனம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் விரிவடைந்து வரும் நிலையில் ஐ.நா. தலைவர் அண்டானியோ குட்ரோஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் போர் பதற்றம் கண்டனத்திற்கு உரியது. இது நிறுத்தப்பட வேண்டும். போர் நிறுத்தம் தற்போது தேவை’ என தெரிவித்துள்ளார்.

2024-10-01 20:11 GMT

ஈரானில் விமான சேவை தற்காலிக நிறுத்தம்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து விமான சேவையை ஈரான் அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

2024-10-01 18:54 GMT

மத்திய கிழக்கில் இன்று இரவு சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தப்படும் - இஸ்ரேல்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் மத்திய கிழக்கில் இன்று இரவு சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,

இஸ்ரேல் மீது ஈரான் 181 ஏவுகணைகளை ஏவியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து ஏவுகணை தாக்குதலை முறியடித்துள்ளது.

ஏவுகணை தாக்குதல் தொடர்பான பாதிப்புகளை விசாரித்து வருகிறோம். அதுதொடர்பான விவரங்களை எதிரிகளுக்கு கொடுக்கப்போவதில்லை. ஈரான் இன்று இரவு மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கை மத்திய கிழக்கை போர் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இன்றைய நிகழ்வுக்கு நிச்சயம் விளைவுகள் உண்டு. மத்திய கிழக்கில் இன்று இரவு சக்திவாய்ந்த தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படும்’ என்றார்.

2024-10-01 18:44 GMT

ஈரானின் ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்பு

ஈரான் ஏவிய ஏவுகணைகளை இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பான அயன் டூம் நடுவானில் சுட்டு வீழ்த்தின. ஆனால், ஒருசில வானில் வீழ்த்தப்பட்ட ஏவுகணைகளின் பாகங்கள் விழுந்து டெல் அவிவில் 2 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024-10-01 18:33 GMT

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்: 7 பேர் பலி

இஸ்ரேலின் ஜபா நகரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு , கத்திக்குத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.

தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகளும் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

2024-10-01 18:28 GMT

நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்கு பதிலடி:

லெபனானில் கடந்த 28ம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். நஸ்ரல்லா கொலைக்கு பதிலடியாகவே இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்