காட்டுத்தீயில் சாம்பலான ரூ.219 கோடி மதிப்பிலான பங்களா; கோடிக்கணக்கில் ஜாக்பாட் வென்றவரின் சோகம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காட்டுத்தீயால் பேரிடர் ஏற்பட்டு உள்ளது என ஜனாதிபதி பைடன் அறிவித்து உள்ளார்.;
லாஸ் ஏஞ்சல்ஸ்,
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். விலங்குகள் மற்றும் பறவைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வேறு இடங்களுக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டு உள்ளனர்.
காட்டுத்தீயால் புகை மண்டலம் பரவி காணப்படுவதுடன், வெப்ப காற்றும் வீசி வருகிறது. இதனால், ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன. இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த காட்டுத்தீக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரின் வீடுகளும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.
காட்டுத்தீயால் கலிபோர்னியாவில் பேரிடர் ஏற்பட்டு உள்ளது என ஜனாதிபதி பைடன் அறிவித்து உள்ளார். காட்டுத்தீயானது 15 ஆயிரம் ஏக்கர் வன பகுதிகள் வரை பரவி வருகிறது. இதுவரை 10 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான பகுதிகள் எரிந்து விட்டன. ரூ.4.46 லட்சம் கோடி முதல் ரூ.4.89 லட்சம் கோடி வரையில் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது என முதல்கட்ட ஆய்வில் மதிப்பிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து காட்டுத்தீ பரவி வரும் சூழலில், சேத மதிப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் லாட்டரியில் ஜாக்பாட் பரிசு தொகையை பெற்ற எட்வின் என்பவரின் பல கோடி மதிப்பிலான பங்களா எரிந்து போயுள்ளது. இதனால், அவர் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். உலக அளவில் பெரிய தொகையை லாட்டரியில் பரிசாக பெற்றவர் எட்வின் கேஸ்டிரோ. கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில், 2.04 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.16,590 கோடி) இவருக்கு பரிசாக கிடைத்தது.
இவற்றில் கடந்த ஆண்டு பிப்ரவரியில், 25.5 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.219.80 கோடி) அளவுக்கு, ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் அமைந்த தன்னுடைய ஆடம்பர பங்களாவுக்காக செலவிட்டார்.
ஆனால், சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கி அவருடைய பங்களா எரிந்து சாம்பலானது என தி நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது. இதனால், வீட்டின் கான்கிரீட் தூண்கள் மற்றும் எரிந்து போன மரக்கட்டைகள் போன்றவையே மீதமுள்ளன. அவற்றின் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
ஹாலிவுட் பிரபலங்களான ஆடம் பிராடி, லெய்டன் மீஸ்டர், பெர்கீ, அன்னா பாரிஸ், அந்தோணி ஹாப்கின்ஸ் மற்றும் ஜான் குட்மேன் உள்ளிட்டோரும் அவர்களுடைய வீடுகளை இழந்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள லெய்டனின் ரூ.55.85 கோடி மதிப்பிலான வீடும் எரிந்து சேதமடைந்தது. அதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளியானது.
இதேபோன்று, பிரபல நடிகர்களான மார்க் ஹாமில், மாண்டி மூர் மற்றும் ஜேம்ஸ் உட்ஸ் உள்ளிட்டோரும் காட்டுத்தீயால் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். பாலிசேட்ஸ் கடற்கரை பகுதியில் அமைந்த நடிகர் கேரி எல்விஸ் வீடும் தீயில் எரிந்து போனது. பிரபல மாடல், பாடகி மற்றும் நடிகையான பாரீஸ் ஹில்டனின் மாலிபு பகுதியில் உள்ள வீடும் எரிந்து சேதமடைந்து உள்ளது.