பரிசு வழங்கும் விழா - விஜய் வருகை

திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்துக்கு விஜய் வந்துள்ளார்

Update: 2024-06-28 01:46 GMT

சென்னை,

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார். இந்நிலையில், இந்த வருடமும் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக பரிசுகளை வழங்க உள்ளார்.

முதற்கட்டமாக, இன்று திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. அதில், கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்க உள்ளார் .

இந்த நிகழ்வில், 750 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட 3,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில், திருவான்மியூரில் பாராட்டு விழா நடைபெற உள்ள தனியார் மண்டபத்துக்கு விஜய் வந்துள்ளார். இங்கு உதவி ஆணையர் தலைமையில் 30 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை 6 மணி வரை நடைபெறும் இவ்விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு மதியம் அறுசுவை சைவ விருந்து தயார் செய்யப்படுகிறது. 

கட்சி தொடங்கிய பின் முதல் முறையாக கல்வி விருது வழங்கும் நிகழ்வு நடப்பதால் விஜய்யின் பேச்சின் மீது கவனம் அதிகரித்துள்ளது. 

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விழாவில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று காலை 9.30 மணியளவில் மாணவர்களுக்கு விஜய் பரிசுகளை வழங்குவார் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்