கடலூரில் அ.தி.மு.க. நிர்வாகி கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2024-06-30 10:29 GMT

சென்னை,

கடலூரில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் அ.தி.மு.க. மாவட்டப் பிரதிநிதியும் முன்னாள் கவுன்சிலருமான புஷ்பநாதன் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன். அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த புஷ்பநாதனின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். தி.மு.க. ஆட்சியில் பொதுமக்கள், காவல்துறையினர், அரசியல் கட்சியினர் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. பகல்-இரவு என்று பாராமல், மக்கள் எப்போதும் அச்சத்துடனே நடமாடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்க, தான் சட்டம் ஒழுங்கை சிறப்புற காத்து வருவதாக மு.க.ஸ்டாலின் தம்பட்டம் அடித்துக்கொள்வது நகைமுரண். புஷ்பநாதன் அவர்களைப் படுகொலை செய்தோரை துரிதமாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்