49 சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

49 சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2024-07-02 07:49 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையானது, நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு வழங்கும் தண்டனைகளை நிறைவேற்றுவது மட்டுமின்றி, அவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான கல்வி மற்றும் தொழில் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. சிறைகள் மற்றும் சிறைவாசிகளின் பாதுகாப்பினை மேம்படுத்துதல், சிறைவாசிகளின் நலன் மற்றும் சிறைவாசிகளை பொறுப்புள்ள நபர்களாக மாற்றி சமுதாயத்தில் மீண்டும் இணைத்தல் ஆகிய மூன்றும் இத்துறையின் முக்கிய நோக்கங்களாகும்.

2023-2024-ம் ஆண்டில் சிறைவாசிகளின் நலனுக்கான நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு முறை மற்றும் உணவின் அளவு ரூ.26 கோடி கூடுதல் செலவில் சரிவிகித சத்துள்ள உணவாக மாற்றம் செய்து வழங்கப்பட்டு வருவதுடன், உணவு தயாரித்திட தேவையான கிரைண்டர், உலர் மாவரைக்கும் இயந்திரம், சிறைவாசிகளுக்கு உரிய நேரத்தில் உணவு விநியோகம் செய்திட இ-ஆட்டோ ஆகியன ரூ.1.23 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளது. 600 சிசிடிவி கேமராக்கள் ரூ.11.50 கோடி செலவில் நிறுவிட உத்தரவிடப்பட்டு, சிறை பாதுகாப்பினை மேற்படுத்த நேரியல் அல்லாத சந்திப்பு கண்டுபிடிப்பான், ஊடுகதிர் அலகிடும் கருவி போன்ற நவீன உபகரணங்கள் ரூ.5.98 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ளன.

சிறை அலுவலர் என்பவர் சிறையின் முதன்மை செயல் அலுவலர் ஆவார். இவரது முக்கியப் பணி சிறைவாசிகளிடையேயும், பணியாளர்களிடையேயும் ஒழுக்கத்தைப் பேணுவதாகும். உதவி சிறை அலுவலரின் முக்கியப்பணி மத்திய சிறைகளில் சிறைவாசிகளை அனுமதி எடுத்தல், ஆடை உடமை போன்றவற்றை பராமரித்தல் ஆகும். கிளைச்சிறைகளை பொறுத்தவரை கண்காணிப்பாளராக செயல்படுவர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிறை அலுவலர் மற்றும் உதவி சிறை அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வு செய்யப்பட்ட சிறை அலுவலர்கள் 5 நபர்களுக்கும், உதவி சிறை அலுவலர்கள் 4 பெண்கள் உட்பட 44 நபர்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தற்போது பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள சிறை அலுவலர் / உதவி சிறை அலுவலர்களுக்கு வேலூரில் அமைந்துள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பயிற்சியகத்தில் 9 மாத கால அடிப்படை பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்