இருப்பை தக்க வைக்க வீராவேசம் காட்ட முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் கே.என்.நேரு தாக்கு

ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டவர் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறார் என எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் கே.என்.நேரு கடுமையாக சாடி உள்ளார்.

Update: 2024-06-27 16:05 GMT

சென்னை,

தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடத்தியிருக்கிறது. இதே இடத்தில் தான் ஜெயலலிதா மரணத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு அன்று முட்டுக்கட்டை போட்ட எடப்பாடி பழனிசாமி தான் இன்றைக்குக் கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார். வெட்கமாக இல்லையா?.

அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த 4,800 கோடி ரூபாய் நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க 2018-ம் ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அப்போது, இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் என சொன்னார்கள். அன்றைக்கு சி.பி.ஐ.க்கு பதற்றம் அடைந்தவர் இன்றைக்கு சி.பி.ஐ.க்கு தம்பட்டம் அடிக்கிறார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய 13 அப்பாவிகளை தூத்துக்குடியில் சுட்டுக் கொன்றது அ.தி.மு.க. ஆட்சியில் தானே. அப்போது நீங்கள் ராஜினாமா செய்தீர்களா?.

விஷச்சாராயம் நிச்சயம் தடுக்கப்பட வேண்டும். அதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் விஷச் சாராய மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதில், தமிழ்நாடு கடைசி இடத்தில் தான் இருக்கிறது.கள்ளச்சாராய மரணங்கள் நடப்பது தி.மு.க. ஆட்சியில் மட்டும்தான் என்பது போல அ.தி.மு.க. பேசி வருகிறது. ஜெயலலிதா ஆட்சியில் 2001-ல் பண்ருட்டியில் 52 பேரும், அதே ஆண்டில் காஞ்சிபுரம், செங்குன்றம் பகுதிகளில் 30 பேரும், 1993-ல் விழுப்புரம் அருகே சித்தலிங்கமடம் கிராமத்தில் 9 பேரும், அதே ஆண்டில் திருத்தணி அருகே திருவாலங்காடு பகுதியில் 7 பேரும், 1996-ல் திருச்சி உறையூரில் 10 பேரும் கள்ளச்சாராயத்தால் இறந்தனர்.

அப்போதெல்லாம் முதல்-அமைச்சர் பதவியை ஜெயலலிதா ராஜினாமா செய்யவில்லை. பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் இப்படியான கள்ளச்சாராய மரணங்கள் அதிகளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்காக அம்மாநில முதல்-அமைச்சர்கள் எல்லாம் ராஜினாமா செய்துவிட்டார்களா?.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் மஜுர்காம், நகவ் பகுதிகளில் 2009-ல் கள்ளச் சாராயத்துக்கு 136 பேர் பலியானபோது அங்கே மோடி தான் முதல்-மந்திரியாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். உள்துறை மந்திரியாக இருந்தவர் அமித்ஷா. அவர்கள் இருவரும் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்தார்களா?.

மக்களின் நம்பிக்கையை முழுவதுமாக இழந்து வரும் எடப்பாடி பழனிசாமி, தனது இருப்பை தக்க வைக்க முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வீராவேசம் காட்ட முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.யார் காலையும் பிடித்து முதல்-அமைச்சர் ஆனவர் அல்ல மு.க.ஸ்டாலின். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் பேராதரவுடன் ஆட்சி செய்து, தமிழ்நாட்டினை முன்னேற்ற நாள்தோறும் செயல்பட்டு வருகிறார்.எனவே, பகல்கனவு காண்பதை எடப்பாடி பழனிசாமி நிறுத்திவிட்டு, பா.ஜனதாவிடம் அடகு வைக்கப்பட்டு, தற்போது மூழ்கும் கப்பலாக உள்ள தனது கட்சியை பற்றிக் கவலைப்படும் வேலையைப் பார்க்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்