'வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது' - ஜனாதிபதி திரவுபதி முர்மு

சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பு அளப்பரியது என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-14 14:02 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

"எனது அன்புக்குரிய சக குடிமக்களே, உங்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 78-வது சுதந்திர திருநாளைக் கொண்டாட நாடு தயாராகி வருவதைக் கண்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதனையொட்டி செங்கோட்டை, மாநிலங்களின் தலைநகரங்கள் அல்லது உள்ளூர் பகுதிகளில் மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறப்பதை காண்பது, நமது இதயங்களில் எப்போதும் உற்சாகத்தை ஏற்படுத்தும். 140 கோடிக்கும் அதிகமான சக இந்தியர்களுடன் நமது பெரும் தேசத்தின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கும் உணர்வாகும். நமது குடும்பங்களில் நாம் கொண்டாடும் பல்வேறு பண்டிகைகளைப் போல, நமது சக குடிமக்களை உள்ளடக்கிய நமது குடும்பத்துடன் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவற்றை நாம் கொண்டாடி வருகிறோம்.

ஆகஸ்ட் 15-ம் தேதி நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், வெளிநாடுகளிலும், கொடியேற்றும் நிகழ்ச்சிகளில் இந்தியர்கள் பங்கேற்று தேசப்பக்திப் பாடல்களைப் பாடி, இனிப்புகளை வழங்குவார்கள். இளம் சிறார்கள், கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். தமது பெரும் தேசம் குறித்தும் அதன் குடிமகனாக நாம் இருப்பதன் பெருமை குறித்தும் அவர்கள் பேசுவதை நாம் கேட்கும் போது, அவர்களது வார்த்தைகளில், நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் சொல்லி வந்ததை நாம் காணலாம். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற அவர்களது கனவுகளையும், வரும் ஆண்டுகளில் நாடு அதன் முழுப் பெருமையை பெறும் என்ற அவர்களது விருப்பங்களையும் பிணைத்துள்ள சங்கிலியின் ஒரு பகுதியாக நாம் உள்ளோம் என்பதை நம்மால் உணர முடியும்.

இந்த வரலாற்றுச் சங்கிலியின் இணைப்புகளாக நாம் இருக்கிறோம் என்பதை உணரும்போது, நாம் மிகுந்த பணிவுடையவர்களாகிறோம். அந்நியர் ஆட்சியின் கீழ், நாடு இருந்த நாட்களை அது நமக்கு நினைவூட்டுகிறது. தேசப்பற்றுடனும், துணிச்சலுடனும், மகத்தான ஆன்மாக்கள் பெரும் ஆபத்துக்களை எதிர்கொண்டதுடன், உயிர்த் தியாகங்களையும் புரிந்தனர். அவர்களது நினைவுக்கு நாம் தலை வணங்குகிறோம்.

அவர்களது முடிவற்ற உழைப்பின் காரணமாக நூற்றாண்டுகளாக சோம்பிக் கிடந்த இந்தியாவின் ஆன்மா விழித்துக் கொண்டது. நமது மண்ணில் தொடர்ந்து காணப்படும் பல்வேறு பாரம்பரியங்களும், நன்மதிப்புகளும், பல தலைமுறைகளைச் சேர்ந்த மாபெரும் தலைவர்களின், புதிய வெளிப்பாடாக கருதப்படுகிறது. பல்வேறுபட்ட பாரம்பரியங்கள் மற்றும் அவற்றின் வெளிப்பாடுகளை ஒருங்கிணைத்தது நமது துருவ நட்சத்திரமாகவும், தேசப்பிதாவாகவும் திகழ்ந்த மகாத்மா காந்தி ஆவார்.

அவருடன் சர்தார் படேல், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பாபா சாஹேப், அம்பேத்கர், பகத் சிங், சந்திர சேகர் ஆசாத் போன்ற மாபெரும் தலைவர்களும் மற்றும் எண்ணற்றவர்களும் இருந்தனர். அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்ற நாடு தழுவிய இயக்கமாக அது இருந்தது. அதில், தில்கா மஞ்ஜி, பிர்சா முண்டா, லஷ்மண் நாயக், புலோஜனா போன்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றனர்.

இவர்களைப் போன்று தியாகங்கள் புரிந்த பலரும் தற்போது கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை பழங்குடியினர் கவுரவ தினமாக நாம் கொண்டாடத் தொடங்கியுள்ளோம். அடுத்த ஆண்டு அவரது 150-வது பிறந்த நாள் வரப்போகிறது. தேசத்தை தட்டியெழுப்புவதில் அவரது பங்களிப்பை மேலும் பெருமைப்படுத்தும் ஒரு வாய்ப்பு அப்போது கிட்டும்.

இன்று ஆகஸ்ட் 14-ம் தேதி. இந்நாளை பிரிவினைக் கொடூரங்களை நினைவு கூரும் நாளாக நாடு அனுசரித்து வருகிறது. மாபெரும் தேசம் இரண்டாக பிளக்கப்பட்டபோது, திணிக்கப்பட்ட இடப்பெயர்வால், கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட நேர்ந்தது. லட்சக்கணக்கான மக்கள், தங்கள் உயிர்களை இழந்தனர். சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுவதற்கு ஒரு நாள் முன்னர், ஒப்பிட முடியாத மனித சோகத்தை நாம் நினைவு கூர்கிறோம். இவ்வாறு சுக்கல்களாக கிழித்தெறியப்பட்ட குடும்பங்களுடன் நாம் நிற்கிறோம்.

அரசியல் சாசனத்தின் 75-வது ஆண்டு தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். புதிதாக சுதந்திரம் பெற்ற நாட்டின் பயணம், இடையூறுகள் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. உலக அரங்கில் இந்தியா தனது உரிமை மிகு இடத்தை பெறுவதற்கு, நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகிய அரசியல் சாசன லட்சியங்கள் மீது நாம் உறுதியாக நிற்கிறோம்.

இந்த ஆண்டு நமது நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. தகுதி வாய்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 97 கோடியாக இருந்தது. இது ஒரு வரலாற்றுச் சாதனை. மனித குலம் முன் எப்போதும் கண்டிராத மிகப் பெரிய தேர்தல் நடைமுறையை இது குறிக்கிறது. இத்தகைய மாபெரும் நிகழ்வை எத்தகைய குறைபாடுகளும் இன்றி சுமூகமாக நடத்தியதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பாராட்டப்பட வேண்டும்.

இந்த நடைமுறையின்போது, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வாக்காளர்களுக்கு உதவிய அனைத்து அதிகாரிகளுக்கும், பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். இத்தகைய பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்திய போது, அது ஜனநாயக கொள்கைக்கான மகத்தான வாக்காக திகழ்கிறது. இந்தியாவின் வெற்றிகரமான தேர்தல் நடைமுறைகள், உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துகிறது.

2021-ல் இருந்து 2024 வரை இந்தியா ஆண்டுக்கு 8 சதவீத சராசரி வளர்ச்சி விகிதத்துடன் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்தது. இது மக்களின் கைகளில் அதிக பணத்தை தந்ததுடன் மட்டுமல்லாமல், வறுமைக் கோட்டுக்கு கீழே வசித்து வந்த ஏராளமான மக்களை பெருமளவுக்கு குறைக்கவும் செய்தது. வறுமையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருபவர்களை, கைதூக்கி விடுவதற்கும், அதிலிருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டுவருவதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உதாரணமாக, பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவு திட்டம், பெருந்தொற்றுப் பரவலின் ஆரம்பக் கட்டத்தில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து அது சுமார் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷனை வழங்கி வருகிறது. அண்மையில் வறுமையிலிருந்து விடுபட்டவர்கள், மீண்டும் அதன் பிடிக்குள் சிக்காமல் இருப்பதை அது உறுதி செய்துள்ளது.

இந்தியா உலகின் ஐந்து பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறியிருப்பது நமது அனைவருக்கும் பெருமைக்குரியதாகும். விரைவில் 3 பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக நாம் மாற உள்ளோம். விவசாயிகள், தொழிலாளர்களின் இடையறாத கடின உழைப்பு, திட்டங்களைத் தீட்டுபவர்கள், செல்வத்தை உருவாக்குபவர்கள், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களின் தொலைநோக்குச் சிந்தனையால் இதனை சாதிக்க முடிந்தது.

நமது விவசாயிகள், எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, வேளாண் உற்பத்தியைத் தொடர்ந்து உறுதி செய்துள்ளனர். இத்துடன், வேளாண்மையிலும் நமது மக்களுக்கு உணவூட்டுவதிலும், இந்தியா தன்னிறைவை அடைய மிகச் சிறந்த பங்களிப்பை அவர்கள் வழங்கியுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மிகப்பெரிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது. எதிர்கால தொழில்நுட்பத்தில் பெரும் வளத்தைக் கருத்தில் கொண்டு அரசு, செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு துறைகளைத் தீவிரமாக மேம்படுத்தி வருகிறது.

மேலும், புத்தொழில் நிறுவனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதன் மூலம் அவர்களது வளர்ச்சியை ஊக்கப்படுத்தியுள்ளது. அது இந்தியாவை மேலும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாற்றியுள்ளது. பெரும் வெளிப்படைத்தன்மையுடன் வங்கி மற்றும் நிதித்துறைகள், மேலும் சிறந்த செயல் திறனுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த அம்சங்கள் அனைத்தும், அடுத்த தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அரங்கை அமைத்துள்ளதுடன், வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தியாவை கொண்டு செல்லும், பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

இந்த அதிவேக, அதே சமயம், சமத்துவமான வளர்ச்சி, உலக விவகாரங்களில் இந்தியாவிற்கு ஒரு உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது. ஜி-20 தலைமைத்துவத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த பின்னர், இந்தியா, உலகின் தென்பகுதிக்கான குரலை ஒலிக்கச் செய்யும் பங்கை ஒருங்கிணைத்துள்ளது. உலக அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்பை விரிவுபடுத்த, இந்தியா தனது செல்வாக்கு மிக்க நிலையைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எனது அன்புக்குரிய சக குடிமக்களே, அரசியல் சாசன சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் வார்த்தைகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். "நமது அரசியல் ஜனநாயகத்தை, சமூக ஜனநாயகமாகவும் மாற்ற வேண்டும். சமூக ஜனநாயகத்தை அடித்தளமாக கொள்ளாமல், இருந்தால் அரசியல் ஜனநாயகம் நீண்ட நாள் நீடிக்காது" என்று அவர் கூறியதை நான் மேற்கோள் காட்டுகிறேன்.

அரசியல் ஜனநாயகத்தின் நிலையான முன்னேற்றம், சமூக ஜனநாயகத்தை ஒருங்கிணைப்பதில் காணப்படும் முன்னேற்றத்திற்கு சாட்சியமாக அமையும். உள்ளடக்கிய என்ற உணர்வு, நமது சமூக வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் பரவியுள்ளது. நமது பன்முகத்தன்மை மற்றும் பன்மையுடன் ஒத்திசைந்த தேசமாக ஒருங்கிணைந்து முன்னேறி செல்லவேண்டும். உறுதியான செயல்பாடுகள், உள்ளடக்கத்திற்கான சாதனமாக வலுப்படுத்தப்பட வேண்டும்.

நம்மைப் போன்ற பரந்து விரிந்த நாட்டில், சமூக நிலைகளின் அடிப்படையில் உணரப்பட்ட கருத்து வேறுபாட்டை தூண்டும் போக்குகள், புறக்கணிக்கப்படும் என்பது எனது திடமான நம்பிக்கையாக உள்ளது. சமூக நீதி, அரசின் உயர் முன்னுரிமையாக உள்ள நிலையில், இதன் மூலம் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் சமுதாயத்தின் நலிந்த பிரிவினரின் நலனுக்காக இதுவரை இல்லாத வகையில், எண்ணற்ற முன் முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.

பிரதமரின் சூரஜ் எனப்படும், சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான பொது நலத் திட்டம், சமுதாயத்தின் நலிந்த பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு நேரடி நிதியுதவி வழங்க வகை செய்கிறது. பிரதமரின் ஜன்மன் எனப்படும் பிரதமரின் பழங்குடியினர் ஆதிவாசி பரிபாலனத்திட்டம், எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய பழங்குடியின குழுக்களின் சமூகப் பொருளாதார சூழல்களை மேம்படுத்துவதற்கான மாபெரும் இயக்கமாக மேற்கொள்ளப்படுகிறது. நமஸ்தே எனப்படும் இயந்திர மயமாக்கப்பட்ட துப்புரவு சூழலியலுக்கான தேசிய செயல் திட்டம், எந்தவொரு துப்புரவு தொழிலாளரும், கழிவுநீர் மற்றும் மலக்கழிவு தொட்டிகளை சுத்தம் செய்வதற்காக இயந்திர உதவியின்றி, பணியாற்றாமல் இருப்பதை உறுதி செய்கிறது.

'நீதி' என்ற சொல், பல்வேறு சமூக அம்சங்களை உள்ளடக்கிய, விரிவான சாத்தியமான உணர்வின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் பாலின நீதி மற்றும் பருவநிலை நீதி ஆகிய இரண்டு அம்சங்களை மட்டும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

நமது சமுதாயத்தில், பெண்கள் சமமாக மட்டுமின்றி, சமம் என்பதற்கு மேலாகவே மதிக்கப்படுகின்றனர். எனினும், அவர்களும் பாரம்பரிய நியதிகளால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், மகளிர் நலன் மற்றும் மகளிருக்கு அதிகாரமளிப்பதற்கு இந்த அரசு சம முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கடந்த பத்தாண்டுகளில் இந்த நோக்கத்தின் அடிப்படையில், பட்ஜெட் ஒதுக்கீடு 3 மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பிறப்பு அளவில் பாலின விகிதம் கணிசமாக மேம்பட்டிருப்பது, மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாகும். மகளிர் நலனுக்காக அரசால் பல்வேறு சிறப்புத் திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 'மகளிர் சக்தியைப் போற்றுவோம்' திட்டம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை உண்மையாகவே உறுதி செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.

பருவ நிலை மாற்றம் என்பது யதார்த்தமானதாக மாறியுள்ளது. இது வளரும் நாடுகள் தங்களது பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் பெரும் சவாலாக உருவாகியுள்ளது. இந்தப் பிரச்சனையில் நாம் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே முன்னேற்றம் அடைந்துள்ளோம். புவி வெப்பமயமாதலின் மோசமான பாதிப்புகளிலிருந்து இந்த பூமியை பாதுகாப்பதற்கான மனித குலத்தின் போராட்டத்தில் முன்னணியில் இருப்பதில் இந்தியா பெருமிதம் அடைகிறது. நீங்கள் அனைவரும் உங்களது வாழ்க்கை முறையில் சிறிய அளவில் ஆனால், வலுவான மாற்றத்தை ஏற்படுத்தி, பருவ நிலை மாற்றச் சவாலை எதிர்கொள்ள உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நீதித்துறையைப் பற்றி பேசும்போது, இந்த ஆண்டு ஜூலை முதல் இந்திய நியாயச் சட்டத்தைப் பின்பற்றுவதை சுட்டிக்காட்டுவது அவசியம் என்பதோடு, மேலும் ஒரு காலனி ஆதிக்க காலத்து நடைமுறையை நீக்கியிருப்பதை பற்றியும் குறிப்பிடுவது அவசியம். இந்தப் புதிய சட்டம், குற்ற வழக்குகளில் தண்டனை பற்றி மட்டுமே கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை நமது சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு செலுத்தும் மரியாதையாக நான் பார்க்கிறேன்.

எனது அன்புக்குரிய சக குடிமக்களே, அமிர்த காலம் எனப்படும், நமது சுதந்திர தின நூற்றாண்டை எட்டுவதற்கான அடுத்த கால் நூற்றாண்டு காலம் தற்கால இளைஞர்களால் வடிவமைக்கப்பட உள்ளது. அவர்களது ஆற்றல் மற்றும் உற்சாகம், நாடு புதிய உச்சத்தை அடைய உதவும். இளைஞர்களின் மனதைப் பக்குவப்படுத்தி, நமது பாரம்பரியத்தில் சிறந்த அம்சங்களையும், தற்காலிக அறிவாற்றலையும் கொண்ட புதிய மனநிலையை உருவாக்குவதே நமது முன்னுரிமையாக உள்ளது. இதற்கேற்ப, தேசிய கல்விக்கொள்கை 2020-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு, அதன் பலன்கள் தெரியவந்துள்ளது.

இளைஞர்களின் திறமைகளைப் பயன்படுத்த ஏதுவாக, அவர்களுக்கான திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் பிற வாய்ப்புகளுக்கு உதவும் வகையில் அரசு, பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிக்கான 5 திட்டங்கள் அடங்கிய பிரதமரின் தொகுப்பு, 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு பலனளிக்கும். அரசின் புதிய முன்முயற்சியின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் முன்னணி தொழிற்சாலைகளில் ஒரு கோடி இளைஞர் தொழில் பழகுநர் பயிற்சியை பெறுவார்கள். இவை அனைத்தும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளத்திற்கான பங்களிப்பாக அமையும்.

இந்தியாவில் அறிவியல் தொழில்நுட்பத்தை, அறிவாற்றலுக்கான தாகமாகவும், மனிதகுல முன்னேற்றத்திற்கான சாதனமாகவும் நாம் பார்க்கிறோம். டிஜிட்டல் பயன்பாட்டில் நமது சாதனைகள், பிற நாடுகளின் முன்மாதிரியாகப் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், விண்வெளி ஆய்வில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு முன்னேறியுள்ளது. மனிதர்களை சுமந்து செல்லும் இந்தியாவின் முதலாவது விண்கலத்தில் இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் குழு செல்ல இருக்கும் ககன்யான் விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படுவதைக் காண உங்கள் அனைவருடனும் இணைந்து, நானும் ஆவலாக இருக்கிறேன்.

விளையாட்டு உலகம், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ள மற்றொரு துறையாகும். விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு சரியாக முன்னுரிமை அளித்ததன் பலனை தற்போது காண்கிறோம். அண்மையில் நிறைவடைந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணியினர் சிறப்பான முயற்சிகளை வெளிப்படுத்தினர். விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். அவர்கள் இளைஞர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

கிரிக்கெட்டில் இந்தியா டி-20 உலகக் கோப்பையை வென்றிருப்பது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செஸ் விளையாட்டிலும் நமது வீரர்கள் நாட்டிற்கு பெருமிதம் தேடித் தந்துள்ளனர். தற்போதைய யுகம், செஸ் விளையாட்டில் இந்திய யுகத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. பேட்மிண்டன், டென்னிஸ் மற்றும் பிற விளையாட்டுகளிலும் நமது இளைஞர்கள் உலக அரங்கில் தடம்பதித்துள்ளனர். அவர்களது சாதனைகள் அடுத்த தலைமுறையினருக்கும் உத்வேகம் அளிக்கும்.

எனது அன்புக்குரிய சக குடிமக்களே, நாடு சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகியுள்ள நிலையில், உங்களுக்கு, குறிப்பாக, தங்களது உயிரையும் பொருட்படுத்தாது நமது சுதந்திரத்தைப் பேணிக் காத்து வரும் நமது ஆயுதப்படையின் துணிச்சல் மிக்க வீரர்களுக்கு எனது நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக்கொள்கிறேன். நாடு முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீதித்துறை மற்றும் குடிமைப்பணி அலுவலர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நமது தூதரக பணியாளர்களுக்கும் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துகள், நீங்கள் நமது குடும்பத்தின் ஒரு அங்கம், உங்களது சாதனைகள் எங்களைப் பெருமிதம் அடைய வைக்கிறது. நீங்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் தலை சிறந்த பிரதிநிதிகளாக இருக்கிறீர்கள். அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக்கொள்கிறேன்."

இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்