காங்கிரஸ் கட்சியை அரசு நிர்வாகங்களில் இருந்து அகற்ற வேண்டும் - பிரதமர் மோடி

விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் ரூ.1,400 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

Update: 2024-09-20 13:34 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் வார்தாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொழில் வளர்ச்சி கழகத்தின் சார்பில், சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட இருக்கும் ஜவுளி பூங்காவுக்கான அடிக்கல்லையும் பிரதமர் மோடி நாட்டினார்.

இதைத்தொடர்ந்து, உடல் உழைப்பையும், பாரம்பரிய கருவிகளையும் பயன்படுத்தி வேலை செய்யும் கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினை தொழிலாளர்களுக்காக தொடங்கப்பட்ட பிரதம மந்திரியின் விஸ்வகர்மா திட்ட பயனாளிகளுக்கானபல்வேறு திட்டங்களையும், மாநில அரசின் சார்பில் உருவாக்கப்பட்ட இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

1932ல் இதே நாளில் தீண்டாமைக்கு எதிராக மகாத்மா காந்தி தனது போராட்டத்தை துவங்கினார். இந்த நாளில் விஸ்வகர்மா திட்டத்தை துவங்கி ஓராண்டு நிறைவு பெறுவது, வளர்ந்த இந்தியாவுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் இந்த ஓராண்டில் சகோதர, சகோதரிகளுக்கு ரூ.1,400 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அமராவதியில் மாபெரும் ஜவுளி பூங்காவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உலக ஜவுளி சந்தையில் இந்தியா முன்னணியாக திகழ்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட மக்களை வளர விடாமல், காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் தடுக்கின்றன. தலித் மக்களுக்கு எதிரான எண்ணம் கொண்ட காங்கிரஸ் கட்சியை அரசு நிர்வாகங்களில் இருந்து அகற்ற வேண்டும். விஸ்வகர்மா திட்டத்தின் மூலம், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., சமூக மக்கள் நன்கு பலனடைந்துள்ளனர். தெலுங்கானாவில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி கொடுத்து விட்டு, அதனை இன்னும் நிறைவேற்றாததால், விவசாயிகள் பெரும் ஏமாற்றத்துடன் கவலையில் உள்ளனர். விவசாயிகளை அரசியலுக்கும், ஊழலுக்கும் மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்துகிறது. இன்றைய காங்கிரசிடம் தேசபக்தி முற்றிலும் மலிந்து விட்டது. நேர்மறையற்ற, ஊழல்மிக்க கட்சி என்றால், அது காங்கிரஸ்தான். பொய்யும் துரோகமும் காங்கிரசின் அடையாளம். மராட்டிய மக்கள் காங்கிரசிடம் இருந்து சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்