இது குப்பைத் தொட்டி அல்ல... நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நிராகரித்த அலகாபாத் வழக்கறிஞர்கள்
முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.;

அலகாபாத்:
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் ஹோலி பண்டிகையின்போது தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு படையினர், அந்தவீட்டில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் ஏராளமான நகைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர். அந்த பணம் முழுவதும் கணக்கில் காட்டப்படாத பணம் ஆகும். அதன் மதிப்பு ரூ.15 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம், சம்பந்தப்பட்ட நீதிபதியை அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக மாற்றம் செய்ய முடிவு செய்தது. கொலிஜியம் தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. ஆனாலும், முறைகேடுகளுக்கு ஆளாகியுள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி விலக செய்ய வேண்டும் என்று கொலிஜியத்தில் உள்ள சில நீதிபதிகள் தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ளது. முறைகேடு செய்த நீதிபதிக்கு இதெல்லாம் ஒரு தண்டனையா? என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்நிலையில், முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் ஏற்க மறுத்துள்ளனர். இதுதொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளுக்கு அலகாபாத் பார் அசோசியேசன் ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், கொலிஜியத்தின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், அலகாபாத் ஐகோர்ட்டு ஒரு குப்பைத் தொட்டியா? என்ற கேள்வியை எழுப்புவதாகவும் கூறி உள்ளது.
'தற்போதைய சூழ்நிலையில், அலகாபாத் ஐகோர்ட்டில் நீதிபதிகள் பற்றாக்குறை உள்ளது. பல ஆண்டுகளாக புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை. பார் அசோசியேசனில் உள்ள உறுப்பினர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்போது, பார் அசோசியேசனிடம் கலந்தாலோசிப்பதில்லை என்பது மிகுந்த கவலைக்குரியது.
தகுதியானவரை தேர்வு செய்வதில் ஏதோ ஒரு குறைபாடு உள்ளது. இதன் விளைவாக ஊழல் நடக்கிறது. நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைகிறது. இதையெல்லாம் பார்க்கையில், அலகாபாத் ஐகோர்ட்டை பிரிக்கும் சதியாக இருக்கலாம் என தோன்றுகிறது. இந்த விஷயத்தில் சரியான முடிவை எடுப்பதற்காக சங்க பொதுக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறும்' என்றும் பார் அசோசியேசன் கூறி உள்ளது.