மத ரீதியான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது-ஆர்.எஸ்.எஸ்
மத ரீதியான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.;

பெங்களூரு,
ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஒசபெலே பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தில் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஏற்கப்படுவது இல்லை. இதை யாராவது செய்தால், அது அரசியல் சாசனத்திற்கு எதிராக அமையும். முன்பு ஒருங்கிணைந்த ஆந்திரா, மராட்டிய மாநிலங்கள் கொண்டு வந்த மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பளித்தன. அதனால் மத ரீதியான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
மராட்டியத்தில் முகலாய மன்னர் அவுரங்கசீப் அடையாள சின்னமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட அவருடைய சகோதரர் டாரா சிகோ அவ்வாறு உருவகப்படுத்தவில்லை. இந்தியாவின் நெறிமுறைகளுக்கு எதிராக செயல்படுபடுபவர்கள் அடையாள சின்னமாக உருவகப்படுத்தப்படுகிறார்கள்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால் ஊடுருவல்காரர்களை எதிர்த்தவர்கள் அவ்வாறு அழைக்கப்படுவது இல்லை. முகலாய மன்னர் அக்பருக்கு எதிராக ராஜ்புத் மன்னர் மகாரானா பிரதாப் போராடினார். ஊடுருவல் மனநிலையில் உள்ளவர்கள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். இந்தியாவின் நெறிமுறைகளுடன் செயல்படுபவர்களுடன் நாம் இணைந்து நிற்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.