சர்ச்சைக்குரிய அலகாபாத் நீதிமன்ற தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
அலகாபாத் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு மனதிற்கு வருத்தத்தை அளிக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.;

புதுடெல்லி,
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சமீபத்தில் அளித்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது உடைகளை கிழிப்பது பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல என தீர்ப்பு வழங்கியிருந்தார். இந்நிலையில் அலகாபாத் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
அலகாபாத் நீதிபதி வழங்கிய சர்ச்சை தீர்ப்பை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சுப்ரீம் கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. போதிய சென்சிட்டிவிட்டி இல்லாமல் எழுதப்பட்ட தீர்ப்பு எனவும் நாட்டின் தீவிரமான பிரச்சினைகள் முற்றிலும் உணர்வு பூர்வமற்ற வகையில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி இப்படி ஒரு தீர்ப்பை எழுதி இருப்பதாகவும் சிறுமி பாதிக்கப்பட்ட விவகாரம் மனித தன்மையற்ற வகையில் அணுகப்பட்டுள்ளதாகவும் சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் கடினமான வார்த்தையை பயன்படுத்தியதற்கு வருந்துவதாகவும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு நான்கு மாதங்கள் கழித்து இப்படி ஒரு தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், உத்தர பிரதேச அரசுக்கும் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.