விபத்தில் பற்களை இழந்ததால் விரக்தி.. இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை
சிக்கமகளூருவில், விபத்தில் 17 பற்களை இழந்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;
சிக்கமகளூரு,
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் புவனகட்டே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மகன் விக்னேஷ் (18 வயது). இவர் அந்தப்பகுதியில் உள்ள தொழிற்பயிற்சி மையத்தில் (ஐ.டி.ஐ.) படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விக்னேஷ் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் முகத்தில் பலத்த காயம் அடைந்த அவர் 17 பற்களை இழந்துள்ளார். செயற்கை பற்களை பொருத்துவதற்காக பல மருத்துவமனைகளுக்கு விக்னேஷ் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால், செயற்கை பற்களும் பொருத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் விக்னேஷ் மனமுடைந்தார்.
மேலும், பற்கள் இல்லாததால் விக்னேசை அக்கம்பக்கத்தினரும், அவருடன் படிக்கும் சக மாணவர்களும் கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த விக்னேஷ், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர், வீட்டுக்கு திரும்பி வந்தபோது, விக்னேஷ், தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடத்திய விசாரணையில், விபத்தில் பற்களை இழந்ததால் விரக்தியில் இருந்த விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.