பீகார்: பெண் மருத்துவர் படுகொலையில் சதி திட்டம்...? தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு

பீகாரில் தனியார் மருத்துவமனையின் பெண் இயக்குநர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் சதி திட்டம் உள்ளது என தந்தை பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.;

Update:2025-03-23 16:32 IST
பீகார்:  பெண் மருத்துவர் படுகொலையில் சதி திட்டம்...? தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு

பாட்னா,

பீகாரில் ஆசியா என்ற பெயரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் இயக்குநராக செயல்பட்டு வந்தவர் சுரபி ராஜ் (வயது 35). இந்நிலையில், அவருடைய அறையில் இருந்தபோது, நேற்று மாலை 3.30 மணியளவில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலர் அவரை நோக்கி 6 முறை துப்பாக்கியால் சுட்டு, அவரை கொலை செய்து விட்டு தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த பிறகு, சிறிது நேரம் கழித்து அவருடைய அறைக்கு ஊழியர்கள் சென்றபோது, படுகாயங்களுடன் கிடந்த சுரபியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு, உடனடியாக வேண்டிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன்பின்னர் உயர் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என பாட்னா நகர காவல் அதிகாரி அதுலேஷ் ஜா கூறினார்.

இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட சுரபியின் தந்தை ராஜேஷ் சின்ஹா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, சுரபியின் மரணத்தில் சதி திட்டம் உள்ளது. என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. அவருக்கு யாருடனும் விரோதம் கிடையாது.

ஆனால், ஐ.சி.யு.விலேயே சுரபியை பார்க்க நேர்ந்தது. இந்த விவகாரம் பற்றி விசாரிக்கப்பட வேண்டும். உயர்மட்ட அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும். சி.பி.ஐ. விசாரணை வேண்டும். இதில், ஏதோ சதி திட்டம் உள்ளது என்று குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் ஆர்.ஜி. கார் மருத்துவமனையில் கடந்த ஆண்டு பணியில் இருந்த இளம் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூர கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரவலாக அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருந்தது. இதனால், பணியிடங்களில் மருத்துவர்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் பாதுகாப்பு பற்றிய கேள்வி எழுந்தது.

நாடு முழுவதும் இந்த விவகாரத்தில், மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பீகாரில் தனியார் மருத்துவமனையின் பெண் இயக்குநர் மற்றும் மருத்துவரான சுரபி என்பவர் மர்ம நபர்களால் பணியிடத்தில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்