ரூ.1 லட்சம் கோடியில் டெல்லி பட்ஜெட்: முதல் மந்திரி ரேகா குப்தா தாக்கல் செய்தார்
கடந்த நிதி ஆண்டில் தாக்கல் செய்த பட்ஜெட்டை விட 31.5 சதவீதம் கூடுதல் தொகையுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.;

புதுடெல்லி,
2025-26 ஆம் நிதியாண்டுக்கான டெல்லி பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பாஜக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதன்படி, 2025-26 ஆம் நிதியாண்டுக்கான டெல்லி பட்ஜெட் ரூ. 1 லட்சம் கோடி எனவும் இது கடந்த ஆண்டு பட்ஜெட்டைவிட 31.5% அதிகமாகும் என்றும் கூறினார்.
பெண்களின் பல்வேறு திட்டங்களுக்காக ரூ. 5,100 கோடி, இதன் மூலமாக மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,500 வழங்கப்படும். மேலும் பெண்களின் பாதுகாப்புக்காக டெல்லி முழுவதும் 50,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். பிரதம மந்திரி ஜன் தன் ஆரோக்கிய யோஜனா திட்டத்துக்கு ரூ. 2,144 கோடி, 100 அடல் கேன்டீன்கள் நிறுவ ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்; போக்குவரத்தை மேம்படுத்த ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் பட்ஜெட்டில் அறிவித்தார்.