கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தடையை மீறி போராட்டம்- கண்ணீர் புகை குண்டு வீச்சு

மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மேற்கு வங்கத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-08-27 08:01 GMT

கொல்கத்தா,

கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர், மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கு நீதி கேட்டு மாணவ அமைப்பினர் இன்று  தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

Live Updates
2024-08-27 12:30 GMT

மேற்கு வங்காளத்தில் நாளை 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சியான பா.ஜ.க. அறிவித்ததற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முழு அடைப்பு எதுவும் கிடையாது என்றும், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்றும் முதல்-மந்திரியின் தலைமை ஆலோசகர் அலபன் பந்தோபாத்யா தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் நாளை வழக்கம் போல் வாகனங்களை இயக்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்று உறுதியளித்தார்.

2024-08-27 12:13 GMT

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வலியுறுத்தி கொல்கத்தாவில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வெளியே பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநில பா.ஜ.க. தலைவரும் மத்திய மந்திரியுமான சுகந்த மஜும்தார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று, அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.

2024-08-27 11:42 GMT

கொல்கத்தாவில் போலீசார் நடந்து கொண்ட விதம் பற்றிய புகைப்படங்கள், ஜனநாயக கொள்கைகளை மதிக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று கூறியுள்ளார்.

2024-08-27 10:52 GMT

தலைமைச் செயலகம் நோக்கிய பேரணியில் பங்கேற்றவர்களிடம் போலீசார் இன்று கடுமையாக நடந்துகொண்டனர். கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புறப்பட்டு வந்த மாணவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர். இந்த செயலை கண்டித்து நாளை (ஆகஸ்டு 28) மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது. 

2024-08-27 10:48 GMT

கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் டாக்டருக்கு நீதி கேட்டு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நாளை ஆர்ப்பாட்ட பேரணி நடத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

2024-08-27 09:14 GMT

நாட்டில் சர்வாதிகாரி என யாரேனும் இருக்கிறார் என்றால் அது மம்தா பானர்ஜிதான். உண்மை வெளிவர வேண்டும். மம்தா பானர்ஜி மற்றும் காவல் ஆணையாளரிடம் சி.பி.ஐ. அமைப்பு உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் கவுரவ் பாட்டியா இன்று கூறியுள்ளார்.

2024-08-27 09:03 GMT

போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக வந்தவண்ணம் உள்ளனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளது. மகாத்மா காந்தி சாலையில் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

2024-08-27 08:59 GMT

ஹவுரா பாலத்தில் போராட்டக்காரர்கள் சிலரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

2024-08-27 08:54 GMT

ஹவுரா பாலத்தின் முனை மற்றும் சந்திரகாச்சி ரெயில் நிலையம் அருகில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். கண்ணீர்புகை குண்டுகளையும் வீசினர். ஆனால் போராட்டக்காரர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியபடி முன்னேறினர். போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதுடன், சில பேரிகார்டுகளையும் தள்ளிவிட்டனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளிக்கிறது. 

2024-08-27 08:49 GMT

தலைமைச் செயலகம் நோக்கி இன்று நடைபெறும் பேரணியில் மேற்கு வங்காள ஜூனியர் டாக்டர்கள் சங்கம் பங்கேற்கவில்லை. ஆனால், கொல்கத்தாவில் நாளை மிகப்பெரிய பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஷியாம்பஜாரில் தொடங்கி தர்மதலா வரை பேரணி நடத்த உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்