மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்

Update:2022-07-16 21:52 IST

ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2022 முதல் 16-08-2022 வரை

அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், தன ஸ்தானத்தில் சகாய ஸ்தானாதிபதி சூரியனோடு இணைந்து சஞ்சரிப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

சிம்ம - புதன் சஞ்சாரம்

ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். இந்த நேரம் வெற்றிகள் வீடு தேடி வரும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகளும், உடனிருப்பவர்களும் உறுதுணையாக இருப்பர். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு ஒரு நல்ல காரியத்தை செய்து முடிப்பீர்கள். பொதுவாழ்வில் பொறுப்புகள் வந்துசேரும்.

கடக - சுக்ரன் சஞ்சாரம்

ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம- விரயாதிபதியான சுக்ரன் தன ஸ்தானத்திற்கு வரும்போது, விரயத்திற்கேற்ற வரவு வரும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. உடல்நலம் சீராகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாடு செல்லும் முயற்சி அனுகூலமாகும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு. புத்திர ஸ்தானாதிபதியாவும் சுக்ரன் விளங்குவதால் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும்.

குருவின் வக்ர இயக்கம்

ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்றவரான குரு பகவான் வக்ரம் பெறுவது ஓரளவு நன்மைதான். என்றாலும் எதிர்பாராத சில பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். தொழிலில் மாற்றங் களைச் செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள், சுயதொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பர்.

7-ம் இடத்திற்கு அதிபதியாகவும் குரு பகவான் விளங்குவதால் வாழ்க்கைத் துணை வழியே சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். வரன்கள் கை நழுவிச் செல்லலாம். குடும்ப ஒற்றுமை குறையலாம். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதால் அமைதி காண இயலும்.

ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்

ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார் உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் விரயங்கள் கூடும். வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள் நிகழலாம். சொத்துக்களை விற்பனை செய்ய முன்வருவீர்கள். அடகு வைத்து மீட்ட பொருளை மீண்டும் அடகு வைக்க நேரிடும். 'நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றுமாக இருக்கிறதே' என்று கவலைப்படுவீர்கள்.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபாடு செய்யுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 17, 18, 21, 22, 29, 30, ஆகஸ்டு: 8, 12, 13, 14 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் செலவு அதிகரிக்கும். குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் தேவைக்கேற்ற பணம் வந்துசேரும். குடும்பப் பிரச்சினைகளை வளராமல் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளின் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

மேலும் செய்திகள்