கார்த்திகை மாத ராசி பலன்கள் 17-11-2022 முதல் 15-12-2022 வரை
எதையும் திட்டமிடாது செய்து வெற்றியைப் பெறும் மிதுன ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே செவ்வாய் வக்ர இயக்கத்தில் உங்கள் ராசியில் சஞ்சரிக்கிறார். சனியும், குருவும் வக்ர நிவர்த்தியாகி பலத்தோடு சஞ்சரிக்கிறார்கள். எனவே அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தால் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும். புது முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படும். எதிலும் விழிப்புணர்ச்சி தேவைப்படும் நேரம் இது.
சனி மற்றும் குருவின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி, வக்ர நிவர்த்தியாகி பலம் பெற்றுவிட்டார். எனவே அஷ்டமத்துச் சனியால் எண்ணற்ற பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். அளவு கடந்து அன்பு செலுத்தியவர்கள் கூட, எதிரியாகும் சூழ்நிலை உருவாகும். நல்ல ஆலோசனைகளை கேட்டு, அதன்படி செயல்பட முன்வந்தாலும் மனம் செயல்பட விடாது. விரக்தியும், வேதனையும் அதிகரிக்கும். இருப்பினும் ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், கார்த்திகை 12-ந் தேதி வரை சனியைப் பார்ப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் வெற்றியைத் தேடித் தரும்.
7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, 10-ம் இடத்தில் பலம் பெற்றிருக்கிறார். '10-ல் குரு வரும் பொழுது பதவி மாற்றம் வரும்' என்பார்கள். எனவே உத்தியோகத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, ஊர்நலத்தில் அக்கறை கொண்டு செயல்படுபவராக இருந்தாலும் சரி, திடீரெனப் பொறுப்புகளும், பதவிகளும் மாற்றப்படலாம். ஒருசிலருக்கு இனிமை தராத மாற்றங்கள் ஏற்பட்டு இதயத்தை வாடவைக்கும்.
தனுசு - புதன் சஞ்சாரம்
கார்த்திகை 12-ந் தேதி தனுசு ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியான புதன், சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். தெள்ளத் தெளிவாக சிந்தித்து முடிவெடுத்து, திட்டமிட்ட காரியங்களில் வெற்றி காண்பீர்கள்.
வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தும் நேரம் இது. தாயின் உடல்நலம் சீராகும். பெற்றோரின் ஒத்துழைப்போடு சில பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்
கார்த்திகை 13-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் வக்ர இயக்கத்தில் செல்கிறார். 6-க்கு அதிபதியான செவ்வாய் 12-ல் சஞ்சரிக்கும் இந்த நேரம், 'விபரீத ராஜயோக' அடிப்படையில் சில நல்ல மாற்றங்கள் வரப்போகிறது. குறிப்பாக திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திடீரென எடுக்கும் முடிவுகளால் வருமானம் உயரும். என்றைக்கோ குறைந்த விலையில் வாங்கிப் போட்ட இடம், பலமடங்கு விலை உயர்ந்து உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தப் போகிறது.
தனுசு - சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், கார்த்திகை 21-ந் தேதி தனுசு ராசிக்குச் செல்கிறார். இதனால் பிள்ளைகளின் திருமணப் பேச்சுக்கள் முடிவாகி மகிழ்ச்சி தரும். நல்லவர்களின் நட்பால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். தொழில் வெற்றி நடைபோடும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். கடன்சுமை குறையும். கணிசமான தொகை கைகளில் புரளும்.
இம்மாதம் புதன்கிழமை தோறும் விஷ்ணு, லட்சுமி வழிபாடு உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்: 19, 20, 30, டிசம்பர்: 1, 5, 6, 11, 12.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் அஷ்டமத்தில் சனியும், 10-ல் குருவும் பலம்பெற்று இருப்பதால் திடீர், திடீரென மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். உடல்நலக் கோளாறுகளை, உடனுக்குடன் சரிசெய்து கொள்ளவும். வாங்கல் - கொடுக்கல்களில் கவனம் தேவை. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது உத்தமம். அப்போதுதான் பிரச்சினைகளில் இருந்து விடுபட இயலும். பணிபுரியும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்பும், அதனால் மனக்கசப்பும் உருவாகும்.