மிதுனம் - ஆனி தமிழ் மாத ஜோதிடம்

Update:2023-06-16 00:15 IST

ஆனி மாத ராசி பலன்கள் 16-06-2023 முதல் 16-07-2023 வரை

பார்த்ததுமே மற்றவர்களை எடைபோட்டு விடும் மிதுன ராசி நேயர்களே!

ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் விரய ஸ்தானத்தில் தனாதிபதி சந்திரனோடு இணைந்திருக் கிறார். எனவே தன விரயம் ஏற்படும். அதேநேரத்தில் தொழில் ஸ்தானாதிபதி குரு லாப ஸ்தானத்தில் இருப்பதால், வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். அதற்கேற்ப செலவுகளும் வந்துகொண்டே இருக்கும். சேமிப்பிற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்றே சொல்லலாம். அதேநேரத்தில் அடுத்தவருடைய உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியமும் இருக்காது. உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு முன்னேற்றம் காண்பீர்கள்.

மிதுன - புதன்

ஆனி மாதம் 3-ந் தேதி, உங்கள் ராசியான மிதுனத்திற்கு புதன் வருகிறார். ராசிநாதன் ராசியில் சஞ்சரிப்பது யோகமான நேரம் தான். பொருளாதாரத்தில் ஓரளவு நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 'புத ஆதித்ய யோகம்' செயல்படுவதால் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். ஒரு சிலருக்கு கடல் தாண்டிச் செல்லும் யோகம் வாய்க்கலாம். வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

சிம்ம - செவ்வாய்

ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அப்பொழுது குருவின் பார்வை செவ்வாய் மீது பதிகிறது. எனவே 'குரு மங்கல யோகம்' ஏற்படுகிறது. இதனால் கல்யாணக் கனவுகள் நனவாகும். கடமையில் இருந்த தொய்வு அகலும். அதேநேரத்தில் குருவின் பார்வை பதிந்த செவ்வாயின் பார்வை, சனி மீது விழுவதால் பெற்றோருடன் இணக்கமான சூழல் ஏற்படும். சொத்துப் பங்கீடுகள் சுலபமாக முடியும். சவாலான காரியங்களைக் கூட சாதாரணமாக முடித்துக்காட்டி பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள் நன்மை தரும் விதம் அமையும்.

சிம்ம - சுக்ரன்

ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - விரயாதிபதியான சுக்ரன், சிம்மத்திற்கு செல்வது யோகம்தான். இருப்பினும் உடன்பிறப்புகளின் வழியில் ஒருசில பிரச்சினைகளும், விரயங்களும் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வெளிநாட்டு வணிகம் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம். தொழில் கூட்டாளிகளின் கருத்து வேறுபாடுகள் அகலும். நிதி நிறுவனங்களில் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.

கடக - புதன்

ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் தன ஸ்தானத்திற்கு செல்வது யோகம் தான். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நினைத்தது நிறைவேறும். வருமானப் பற்றாக்குறை அகலும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். ஆடம்பரச் செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ப வருமானம் வந்துசேரும். இல்லம் கட்டிக் குடியேறுவது அல்லது கட்டிய வீட்டைப் பராமரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய முதலீடுகளைச் செய்து விருத்தியடைய முன்வருவர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளை சமாளித்து முன்னேற்றம் காண்பர். கலைஞர்களுக்கு நிதி உதவி கிடைக்கும். மாணவ- மாணவிகளுக்கு கட்டுப்பாடுடன் கூடிய கல்வியில் நாட்டம் செல்லும். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை. கட்டுங்கடங்காத செலவுகளால் கவலைகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 20, 21, 27, 28, ஜூலை: 7, 8, 11, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

Tags:    

மேலும் செய்திகள்