மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்

Update:2023-02-13 10:15 IST

மாசி மாத ராசி பலன்கள் 13-02-2023 முதல் 14-03-2023 வரை

நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிக்கும் மிதுன ராசி நேயர்களே!

மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் அஷ்டமத்தில் உள்ள சனியோடு இணைந்து சஞ்சரிக்கிறார். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் விரயங்களை அதிகரிக்கச் செய்யும். அதே நேரம் மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். எனவே செலவிற்கு பயப்பட வேண்டியதில்லை. தேவையான நேரத்தில் தேவையான தொகை உங்கள் கைக்கு கிடைக்கலாம். இருப்பினும் வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள்.

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் லாபாதிபதி செவ்வாய் சஞ்சரிக்கிறார். எனவே இடம், பூமி விற்பனையும் அதன் மூலம் லாபமும் கிடைக்கும். இதுவரை இழுபறி நிலையில் இருந்த பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே வாக்கு, தனம், குடும்பம், தாய், வாகனம், ஜீவனம் ஆகிய இடங்களெல்லாம் புனிதமடைகிறது. அந்த ஆதிபத்யங்களின் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். குறிப்பாக குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கலாம். அதிக ஊதியம் தருவதாகச் சொல்லி நல்ல நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ள முன்வருவீர்கள்.

உச்ச சுக்ரன் சஞ்சாரம்

மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் உச்சம் பெறும்பொழுது, பிள்ளைகள் வழியில் பெரும் விரயம் ஏற்படலாம். அவர்களின் மேற்படிப்பு, கல்யாணம் போன்றவற்றிற்காக செலவிடும் சூழ்நிலை ஒருசிலருக்கு அமையும். குறிப்பாக பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தை, தொழிலுக்கு முதலீடு செய்ய முன்வருவீர்கள்.

கும்ப - புதன் சஞ்சாரம்

மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியான புதன், 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் போது ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்திரவாதம் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சியில் இருந்த தடைகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை பலப்படும். தந்தை வழி ஆதரவு உண்டு. கல்வி கேள்விகளில் ஒரு சிலர் முன்னேற்றம் காண்பர்.

மீன - புதன் சஞ்சாரம்

மாசி 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிநாதனான புதன் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. செய்யும் காரியங்களில் தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லை உண்டு. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

மாசி 29-ந் தேதி, மேஷ ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வரும் போது, விரயத்திற்கேற்ற லாபம் கிடைக்கும். எதை எந்த நேரம் செய்ய வேண்டுமோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிக்க இயலும். ஒரு செயலைச் செய்ய பணம் இல்லையே என்று தயங்கத் தேவையில்லை. காரியத்தை தொடங்கிவிட்டால் நண்பர்களின் உதவி தானாக வந்துசேரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இக்காலத்தில் மிகமிக கவனம் தேவை. அஷ்டமத்துச் சனியை, செவ்வாய் பார்ப்பதால் குடும்பத்திலும், உத்தியோகத்திலும் பிரச்சினை ஏற்படலாம். இனம்புரியாத கவலை மேலோங்கும். பிள்ளைகளை நெறிப்படுத்த இயலாது. விரயங்கள் கூடும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் அமைதி கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-பிப்ரவரி: 13, 21, 22, 25, 26, மார்ச்: 4, 5, 9, 10.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் முற்பாதியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். கணவன் - மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். மாதத்தின் பிற்பாதியில் விரயங்கள் கூடும். வீண் பிரச்சினைகள் அதிகரிக்கலாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் உபத்திரவங்கள் உண்டாகும். அலுவலகத்தில் கேட்ட சலுகைகள் கிடைப்பதும் தாமதமாகலாம்.

மேலும் செய்திகள்