மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்

Update:2023-05-15 00:15 IST

வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2023 முதல் 15-06-2023 வரை

மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் மிதுன ராசி நேயர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே விரயாதிபதி சுக்ரன் வீற்றிருக்கிறார். எனவே தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. கூட்டுத் தொழில் செய்வோர் தனித்து இயங்கும் நேரம் இது. சனி பகவான் 9-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பக்கபலமாக இருக்கும் நண்பர்களின் ஒத்துழைப்போடு புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி காணப்போகிறீர்கள்.

ராகு-கேது சஞ்சாரம்

பின்னோக்கிச் செல்லும் கிரகங்களான ராகு பகவான் லாப ஸ்தானத்திலும், கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கின்றனர். அங்ஙனம் சஞ்சரிக்கும் கேதுவை குரு பார்ப்பதால், பிள்ளைகள் வழியில் சுப நிகழ்ச்சிகள் திடீரென நடைபெறலாம். பூர்வீக சொத்துகளை பிரித்துக் கொள்வதில் இருந்த தடைகள் அகலும். பூர்வீக சொத்தைக் கொடுத்து விட்டு, புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியிலும் ஆர்வம் காட்டுவீர்கள். இதுவரை உங்கள் கருத்துக்கு ஒத்துவராத பிள்ளைகள், தற்போது உங்கள் கருத்துக்கு இணங்குவர். பாகப் பிரிவினையின் காரணமாக பணவிரயமும் ஏற்படலாம். உத்தியோகத்தில் கூடுதல் சம்பளம் தருவதாக வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம். ராகுவின் பலத்தால் அந்த வாய்ப்பு கைகூடலாம்.

கடக - சுக்ரன்

வைகாசி 16-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கும் செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். எனவே உடன்பிறப்புகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். உடன்பிறப்புகளின் வேலைவாய்ப்பு கருதி எடுத்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். கடன்சுமை பாதிக்கு மேல் குறையும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். எனவே பெண் குழந்தைகளின் சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

ரிஷப - புதன்

வைகாசி 18-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்திற்கு புதன் வருவதால், வரவைக் காட்டிலும் செலவு கூடும். வளர்ச்சி கருதி செலவிட்டாலும், கையில் பணம் தங்குவது அரிது. மாமன், மைத்துனர் வழியில் சில நல்ல காரியங்கள் நடைபெறும். மனை கட்டிக் குடியேறும் யோகமும் உண்டு. அரசியல் மற்றும் பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பர். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு, லாபம் திருப்தியாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, கேட்ட இடத்திற்கு மாறுதலும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். கலைஞர்களுக்கு கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் மீண்டும் வரலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான முயற்சி வெற்றியாகும். பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதம் நடந்துகொள்வீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 18, 19, 24, 25, 26, 30, 31, ஜூன்: 10, 11, 14, 15.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

மேலும் செய்திகள்