மிதுனம் - ஐப்பசி தமிழ் மாத ஜோதிடம்

Update:2023-10-18 00:15 IST

ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2023 முதல் 16-11-2023 வரை

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற வழிசொல்லும் மிதுன ராசி நேயர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சனி சஞ்சரிக்கின்றார். அவர் வக்ர நிவர்த்தியான பின்னால் அஷ்டம ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே எதையும் திட்டமிட்டுச்செய்ய இயலாது. திடீர் விரயங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லையாலும் அவதி, அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியிலும் குழப்பம் உருவாகும். சேமிப்புகள் கரைந்து மனதை வாட வைக்கும்.

சனி வக்ர நிவர்த்தி!

ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். அஷ்டமத்துச் சனி வக்ர நிவர்த்தியாகி வலுப்பெறுவதால் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். 'அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச் சனி' என்பது பழமொழி. எனவே எந்த வழிகளிலும் சிக்கல் களும், சிரமங்களும் வரலாம். முன்னெச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. குடும்ப ஒற்றுமை குறையும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைப்பது அரிது. கூட்டாளிகள் உங்களை விட்டு விலகலாம். குடியிருக்கும் வீட்டாலும் பிரச்சினை, கொடுக்கல்-வாங்கல்களிலும் பிரச்சினை என்ற நிலை உருவாகும். உற்றார், உறவினர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். ஊா் மாற்றம், இட மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். யோக பலம் பெற்ற நாளில் சனிக்குரிய வழிபாடுகளை மேற்கொள்வது உகந்தது.

குரு வக்ரம்!

மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்ரம் பெற்றிருக்கின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் அடைவது நன்மை தான். கல்யாண முயற்சி கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ெவளிநாட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் வரலாம்.

நீச்சம் பெறும் சுக்ரன்!

ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு அதிபதி சுக்ரன் நீச்சம் பெறுவது யோகம் தான். ஆனால் 5-ம் இடத்திற்கும் அதிபதியாக சுக்ரன் விளங்குவதால் பிள்ளைகளால் பிரச்சினைகள் உருவாகலாம். பூர்வீக சொத்துத் தகராறுகள் வரலாம். வம்பு வழக்குகள் வீடு தேடிவரும். தெம்பும், உற்சாகமும் குறையும். திடீர், திடீர் என வரும் விரயங்கள் மனதை வாடவைக்கும். செய்யும் முயற்சிகளில் பலன் கிடைப்பது அரிது.

விருச்சிக புதன்!

ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். இக்காலம் உங்களுக்கு ஓர் இனிய காலமாகும். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். உங்கள் திறமைக்கு வெற்றி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர். பாராட்டும், புகழும் கூடும். பல நாட்களாக நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு இடையூறு சக்திகள் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு குறுக்கீடுகளும், நெருக்கடி நிலையும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்கள் சக கலைஞர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமிது. மாணவ-மாணவியர்களுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். விரயங்கள் உண்டு. விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலமே ஒற்றுமை பலப்படும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 25, 26, 29, 30, நவம்பர் 5, 6, 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பச்சை.

மேலும் செய்திகள்