வரலாற்று சிறப்புமிக்க திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயம்

கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் மூன்று சூரியர்கள் இருப்பது மிகவும் விசேஷம். சிவபெருமானே சகல தோஷங்களுக்கும் நிவாரணமாக இருப்பதால் இங்கு நவகிரக சந்நிதி கிடையாது.

Update: 2024-07-19 05:27 GMT

கும்பகோணம் அருகே திருவாவடுதுறையில் கோமுக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயம் திருவாவடுதுறை ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத்தலங்களுள் 99-வது தலமாகவும், காவிரி தென்கரைத் தலங்களுள் 36-வது தலமாகவும் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெரும் சிறப்புகளுடன் திருவாவடுதுறை தலம் திகழ்கிறது.

தல புராணம்

ஒருசமயம் கயிலையில் சிவனும் பார்வதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிவனே தொடர்ந்து வெற்றி பெற்றதாகத் தன்னை அறிவித்துக்கொண்டார். பார்வதிக்கு கோபம் வந்தது. சிவனிடம் சண்டையிட்டார். இதனால் சிவன் அவளைப் பசுவாகப் பிறக்கும்படி சபித்தார்.

பார்வதிதேவி தனக்கு சாபவிமோசனம் தருமாறு வேண்டினாள். திருவாவடு துறை சென்று தம்மை வழிபட்டுவர சாபம் நீங்கும் என்றார் சிவன். அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து சிவனை வேண்டித் தவம் இருந்தாள்.

சிவன் அவளுக்குக் காட்சி தந்து தன்னுடன் அணைத்துக் கொண்டு விமோசனம் கொடுத்தார். 'கோ'வாகிய பசுவுக்கு விமோசனம் தந்தவர் என்பதால் கோமுக்தீஸ்வரர் என்று இறைவனுக்குப் பெயர் வந்தது. இந்த தலத்தில் அமர்ந்துதான் திருமூலர், திருமந்திரத்தை படைத்தார். அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

சுந்தரநாதர் என்ற சிவ யோகியார் கயிலாயத்தில் இருந்து பூவுலகுக்கு வந்து சிவத் தலங்களை தரிசித்து வந்தார். அவர் இத்தலம் வந்தபோது மூலன் என்ற இடையன் இறந்து கிடக்க அவனைச் சுற்றிலும் பசுக்கள் அழுது கொண்டிருப்பதைக் கண்டார். பசுக்களின் மீது பரிவு காட்டிய அவர், தன் உயிரை மூலன் உடலில் புகுத்தி எழுந்தார். பின் பசுக்களை வீட்டில் விட்டுவிட்டு இத்தலத்தில் தவம் செய்யத் தொடங்கினார்.

மூலன் வீட்டிற்குத் திரும்பாததால் அவனது மனைவி இங்கு வந்து சுந்தரநாதரைத் தன்னுடன் வருமாறு அழைத்தாள். அவர் செல்ல மறுத்தார். மூலன் சிவஞானம் பெற்றதாக உறவினர்கள் கூறவே, மனைவியும் விட்டுச் சென்று விட்டாள். இவரே திருமூலர் என்று பெயர் பெற்றார்.

இவர் அரசமரத்தடியில் இருந்து 3 ஆயிரம் பாடல்கள் இயற்றினார். இவையே திருமூலரின் திருமந்திரமாகத் தொகுக்கப்பட்டது. இத்தலத்தின் வெளிப்பிரகாரத்தில் திருமூலருக்கு தனிச் சன்னதி உள்ளது.

தியாகேசமூர்த்தி

இந்த தலத்தில் குரங்கு ஒன்று மகாசிவராத்திரி அன்று வில்வ இலைகளைப் பறித்துக் கீழே போட, அவை அங்கிருந்த சிவ லிங்கத்தின் மீது விழுந்தன. இதனால் மகிழ்ந்த இறைவன் அந்த குரங்குக்கு மூவுலகையும் ஆளும் சக்கரவர்த்தியாகப் பிறக்க வரம் அளித்தார். அவரே முசுகுந்த சக்கரவர்த்தியாவார். அவர் இறைவன் திருவடி பணிந்து, தான் சக்கரவர்த்தியானாலும் குரங்கின் முகத்தோடு, இறைவனைப் பற்றிய சிந்தனை தனக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். இறைவனும் அவரது விருப்பத்தை நிறைவேற்றி ஆசி வழங்கினார்.

வலன் என்ற அசுரன் தேவர்களுக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுத்ததுடன், இந்திரனையும் போரில் வென்றான். இதனால் வானுலகைவிட்டு பூமிக்கு வந்தான் இந்திரன். இதையறிந்த முசுகுந்தன் பெருஞ்சேனையுடன் புறப்பட்டு வலாசுரனை அழித்து, கற்பக நாட்டை மீட்டு இந்திரனுக்கு அளித்தார். தனக்கு உதவிசெய்த முசுகுந்தனைப் பாராட்டிய இந்திரன், "நீ விரும்புவதைக் கேள்" என்றான்.

முசுகுந்தன், "மயன் உனக்கு அளித்த தியாகேச மூர்த்தியைத் தர வேண்டும்''என்று கேட்டார். அதைக் கேட்டு திடுக்கிட்ட இந்திரன், கொடுத்த வாக்குறுதியை மீறக் கூடாது என்பதற்காக, உடனே மயனை அழைத்து ஆறு விடங்கேசர் திருவுருவை உருவாக்கினான்.

அவற்றை முசுகுந்தனிடம் இந்திரன் காண்பிக்க, இறைவன் திருவருளால் உண்மையான விடங்கேசரை அறிந்து, அதைத் தரும்படி கேட்டார் முசுகுந்தன். இதையடுத்து இந்திரன் அந்த ஆறு விடங்கேச மூர்த்திகளுடன், உண்மையான தியாகேசமூர்த்தியையும் கொடுத்தான்.

6 இடங்களில் கோவில்

சப்தவிடங்கேசரையும் பெற்றுக்கொண்ட முசுகுந்தன் தேர்மேல் வைத்து பூமிக்குக் கொண்டுவந்தார். பின்னர் திருநாகைக்காரோணம், திருக்கோளிலி, திருவாய்மூர், வேதாரண்யம், திருநள்ளாறு. திருக்காரவாசல் ஆகிய 6 இடங்களில் கோவில் அமைத்து அந்த 6 மூர்த்தங்களையும் எழுந்தருளச் செய்தார்.

பின்னர் வீதி விடங்க தியாகேசரை திருவாரூரில் பொற்கோவில் உருவாக்கி இறைவியோடும் பீடத்தில் எழுந்தருளச் செய்தார். அது மட்டுமின்றி ஆகம விதிப்படி ஆறுகால பூஜையையும் விழாக்களையும் நடத்திக்கொண்டு அரசாண்டு வந்தார். இப்படி சிறப்பாக ஆட்சி செய்த முசுகுந்தனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதனால் விடங்க தியாகேசர் சந்நிதிக்குச் சென்று தன் மனக்குறையைத் தெரிவித்தார்.

அன்றிரவு முசுகுந்தன் கனவில் தோன்றிய இறைவன், "திருவாரூரில் உள்ளதைப்போலவே திருவாவடுதுறையிலும் நான் உள்ளேன். அங்கு சென்று பணிசெய்து வா! குறிப்பிட்ட காலத்தில் குழந்தை பாக்கியம் பெற்று மகிழ்வாய்" என்று அருளினார். மறுநாள் முசுகுந்தன் சேனைகளோடு புறப்பட்டு திருவாவடுதுறை வந்து முக்தி தீர்த்தத்தில் நீராடி மூலவர் சந்நிதிக்கு வந்தார். திருவாரூரில் உள்ளதுபோலவே ஈசன் அவருக்குக் காட்சி தந்தார். அப்போது அசரீரி ஒலித்தது. முசுகுந்தா, உமக்கு புத்திரப் பேற்றை அளித்தோம். ஞானத்தைப் பின்னர் தருவோம். அதுவரை இங்கேயே இருந்து எம்மை வழிபடுவாயாக!" என்றது.

ஆனந்தம் கொண்ட முசுகுந்தன் அத்தலத்திலேயே தங்கியிருந்து சுற்றியுள்ள கிராம தேவதைகளுக்குப் பத்து நாட்கள் திருவிழா நடத்தினார். தேரோட்டம், திருநடனம் போன்ற நிகழ்வுகளுடன் ரதசப்தமி மகோற்சவத்தில் அரசர்கள், வேதவிற்பன்னர்களுக்கு சன்மானம் வழங்கினார்.

இறைவன் திருவருளால் முசுகுந்தனுக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்தன. மூத்த மகனுக்கு பட்டாபிஷேகம் செய்து ஆட்சியை அவனிடம் ஒப்படைத்தார். பின்னர் சிவனடியார் கூட்டத்தில் சேர்ந்து, ஈசன் திருவடியில் கருத்தைச் செலுத்தி அவர் திருவடி சேர்ந்தார்.

திருஞானசம்பந்தர்

ஒருசமயம் திருஞானசம்பந்தரின் தந்தை சீர்காழியில் வேள்வி ஒன்றை நடத்தினார். அந்த வேள்விக்குத் தங்கம் தேவைப்பட்டது. இதற்காக திருஞான சம்பந்தர் திருவாவடுதுறை வந்து கோமுக்தீஸ்வரரை வணங்கி இறைவனை நினைத்து மனமுருகிப் பாடல்களைப் பாடினார்.

பாடலைப் பாடியவுடன் சிவபெருமான் பூதகணங்களை அனுப்பி, ஆயிரம் பொற்காசுகள் நிரம்பிய பொற்கிழியை திருஞானசம்பந்தருக்கு வழங்கினார். இத்திருத்தலம் நந்திசேத்திரம், அரசவனம், கோகழி, துறைசை, மகா தாண்டவபுரம், கோமுக்தி தலம், சித்தபுரம், நவகோடி சித்தபுரம், சிவபுரம், பிரம்மபுரம், தருமபுரம், கஜாரண்யம் ஆகிய சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தாலும், திருவாவடுதுறை என்றே நடைமுறையில் அழைக்கப்படுகிறது.

மூலவர் சுயம்புமூர்த்தியாக மாசிலா மணீஸ்வரர், கோமுக்தீஸ்வரர் ஆகிய திருநாமங்களுடன் அருள்கிறார். இறைவி ஒப்பிலா முலையம்மை, அதுல்ய குசாம்பிகை, ஒப்பிலா நாயகி ஆகிய திருநாமங்களுடன் அருள்கிறாள்.

போகரின் சீடரும் சிவபக்தருமான திருமாளிகைத் தேவர்மீது படையெடுத்து வந்தார் நரசிங்க மன்னர். அவரைத் தோல்வியுறச் செய்வதற்காக அம்பிகை திருவாவடு துறை கோவில் மதில்மீதிருந்த நந்திகளையெல்லாம் ஒரே நந்தியாக்கி அனுப்பினாள். அதனால் இன்றளவும் இத்திருக்கோவில் மதில்மீது நந்திகள் கிடையாது. திருமாளிகைத் தேவருக்கு வெற்றி தேடித்தந்து ஒப்பில்லா நாயகியாக அம்பிகை திகழ்கிறாள்.

சகல தோஷ நிவாரணம்

இங்கு மூன்று சூரியர்கள் இருப்பது மிகவும் விசேஷம். சிவபெருமானே சகல தோஷங்களுக்கும் நிவாரணமாக இருப்பதால் இங்கு நவகிரக சந்நிதி கிடையாது.

தமிழகத்திலேயே உயரமான விஸ்வரூப நந்தி இங்குதான் உள்ளது. இங்கு பிரதோஷம் மிக விசேஷம். திருமாளிகைத் தேவர் திருமூலருக்கு ஜீவசமாதிகள் அமைந்த தலம். பூசம் நட்சத்திரக்காரர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்டால், வாழ்வு வளம்பெறும்.

திருவிசைப்பா, திருப்புகழ் பெற்ற தலம், செவ்வாய்க்கு கிரகப் பதவி கிட்டிய தலம். செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் வழிபட ஏற்ற தலம். ஏராளமான சித்தர்கள் வழிபட்ட தலம்.

பசு உருவத்துடன் கயிலையை விட்டு அன்னை நீங்கியது கண்டு, கன்றாக மாறி உடன் ஓடிவந்த கணபதியும் தல விநாயகராக அருள்கிறார். அகத்திய முனிவருக்கு பஞ்சாட்சரம் உபதேசித்த கணபதியும் இவர்தான்.

அணைத்தெழுந்த நாயகர்

இத்தலத்தில் ஈசனும் உமையும் தம்பதி சமேதராக 'அணைத்தெழுந்த கோலத்துடன்' காட்சி தருகிறார்கள். சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டான இதுபோன்ற கல்யாண சுந்தரர் கோலத்தினை, வேறு தலங்களில் காண்பது அரிது. ஆகவே, இந்த திருக்கோலத்தை தரிசிப்பது மிகவும் விசேஷம்.

இந்த அம்மையும் அப்பனும், தங்களை வழிபடும் அன்பர்களுக்கு இல்லற வாழ்வினை இனிமையாக்கித் தருகின்றார்கள்.

நல்ல வரன் அமையாமல் வருந்துபவர்களும், கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகளும், இந்த நாயகரை வழிபட்டால் நிம்மதியான இல்லறம் அமையும் என்பது நம்பிக்கை.

இந்த அணைத்தெழுந்த நாதர் கோலத்தினை வாசனைப் பூக்களால் அர்ச்சித்து, விளக்கேற்றி வழிபட்டால், ஜாதகங்களில் உள்ள தோஷங்கள் நீங்கும். மணவாழ்க்கை சிறப்புற அமையும் என்பது ஐதீகம். காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருவாவடு துறை. பஸ் நிறுத்தத்தில் இறங்கி தெற்கே ஒரு கிலோமீட்டர் சென்றால் கோவிலை அடையலாம்.

Tags:    

மேலும் செய்திகள்