காரியத் தடைகள், உடற்பிணிகள் நீக்கும் நெடுங்களநாதர்
இந்த ஆலயத்தில் உள்ள காலபைரவரை குளிகை காலத்தில் வழிபட்டால் தொழில், வியாபாரம் சிறக்கும் என்பது நம்பிக்கை.;
முற்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள், இந்தப் பிறவியில் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். முன் பிறவியில் பாவச் செயல்களைச் செய்தவர்கள், இந்தப் பிறவியில் துயரங்களால் கட்டுண்டுக் கிடக்கிறார்கள். அனைவருமே துன்பத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதற்குரிய முறையான வழி தெரியாமல், தவறான வழிமுறைகளை பின்பற்றி மீண்டும் துன்பத்தையே அடைகிறார்கள்.
இதைத்தான் திருமூலர், 'இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது, முன்பு அவர் செய்கையினாலே முடிந்தது' என்று திருமந்திரம் மூலமாக எடுத்துரைக்கிறார்.
இந்த உலகில் ஒவ்வொரு நாளும் துன்பம் இல்லாமல், இன்பமாக வாழ 'திருநெடுங்களம்' சிவபெருமான் நமக்கு திருவருள் புரிகிறார். இதனை தனது திருநெடுங்களம் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் திருஞானசம்பந்தர் 'இடர்களையாய் நெடுங்களம் மேயவனே' என வரிக்கு வரி உறுதியுடன் கூறி இருப்பதில் இருந்து அறியலாம்.
திருச்சி அருகே அமைந்துள்ளது திருநெடுங்களம் திருத்தலம். இந்த ஆலயத்தின் வெளிப்புற சுவரைத் தாண்டினால், கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்தை கண்டு தரிசிக்கலாம். ராஜகோபுரத்தை அடுத்ததாக கொடிமரம், பலிபீடம் ஆகியவை உள்ளன. இவற்றை வழிபட்டு வெளிப் பிரகாரத்தை வலம் வரவேண்டும். அப்போது வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், மங்கள நாயகி அம்பாள் சன்னிதியும் உள்ளது. வெளிப்பிரகாரத்தின் வடக்கில் அகத்தியர் சன்னிதியும், அந்த சன்னிதிக்கு எதிரே, என்றும் வற்றாத அகத்தியர் தீர்த்தமும் இருக்கிறது.
வெளிப்பிரகாரத்தைக் கடந்து உள்ளே சென்றால் முதலில் மூன்று நிலை ராஜ கோபுரத்தை காணலாம். அதைக் கடந்து உள்சென்றால் கருவறையில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு பார்த்த வண்ணம் திருநெடுங்களநாதர் அருள் பாலிக்கிறார். அகத்தியர் வழிபட்டு பேறு பெற்ற தலம் இது. வந்திய சோழ மன்னனுக்கு, ஈசன் பேரழகுடன் காட்சி கொடுத்த காரணத்தால், இத்தல இறைவன் 'நித்திய சுந்தரேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல ஈசனை 6 வெள்ளிக்கிழமைகள், தொடர்ச்சியாக நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டு வந்தால் முகப்பொலிவு பெறலாம் என்பது நம்பிக்கை. மேலும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் தன்மையும் வந்து சேரும் என்று கூறப்படுகிறது.
அரூபமாக அம்மன்
மங்கள நாயகி அம்பாள் இத்தல ஈசனின் ஒப்பிலா நாயகி ஆவாள். நான்கு திருக்கரங்களுடன் தெற்கு பார்த்த வண்ணம் நின்ற எழிற்கோலத்தில் அருள்புரிகிறாள். மங்களநாயகி அம்மனை, தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமைகள் ராகு காலத்தில் வழிபட வேண்டும். அப்போது அம்பாளுக்கு எலுமிச்சைப் பழத்தில் நெய்தீபம் ஏற்றி, 9 உதிரி எலுமிச்சைப் பழங்களை வைத்து வழிபட்டால் காரியத் தடைகள், உடற்பிணிகள், வறுமை நிலை யாவும் அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
சிவபெருமான் உமையவளுக்கு தனது திருமேனியின் இடப்பாகத்தில் இடம் கொடுத்ததால், இத்தலத்தின் கருவறையில் ஈசன் சிவலிங்க வடிவமாக இருந்தாலும், அரூப வடிவில் அன்னை உமையவளும் உடன் இருப்பதாக ஐதீகம். இதனால் கருவறையின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன. இவ்வாலய கருவறை இரட்டை விமான அமைப்பு, அப்படியே காசி விஸ்வநாதர் கோவில் இரட்டை விமான அமைப்பை ஒத்துள்ளது.
உள்பிரகாரத்தின் தெற்கே சப்த கன்னியரும், ஐயனாரும், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளும் அருள்பாலிக்கிறார்கள். இத்தல ஐயனாரை பங்குனி உத்திர நாளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு கட்டும் யோகம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இங்குள்ள யோக தட்சிணா மூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து 5 வாரம் வழிபட்டு வந்தால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்று கூறப்படுகிறது.
திருமண பாக்கியத்திற்கு..
மேற்கு பிரகாரத்தில் கிழக்கு பார்த்த வண்ணம் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் அருள்கிறார். வராகி அம்மனுக்கு இங்கு தனிச்சன்னிதி உள்ளது. வராகி அம்மனுக்கு அருகில் சிற்ப உரல் ஒன்று இருக்கிறது. அதில் சிறிது விரலி மஞ்சளை இட்டு இடித்து வழிபாடு செய்து வராகி அம்மனை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள வெண்கலக் குதிரையை தூக்கும் ஆண்களையே அந்த காலத்தில் இச்சுற்று வட்டார பெண்கள் தங்கள் கணவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
இவ்வாலயத்தில் உள்ள காலபைரவரை, எதையும் வளரச் செய்யும் நேரமான குளிகை காலத்தில் வழிபட்டால் தொழில், வியாபாரம் சிறக்கும். ராகு காலங்களில் நெய்யில் சுட்ட உளுந்து வடைமாலை சூட்டி, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நாகதோஷம் அகலும். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அந்திசாயும் மாலைப்பொழுதில், பைரவருக்கு தேன் அபிஷேகம் செய்து, புனுகு சாத்தி, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் தனவிருத்தி உண்டாகும்.
ஆலயத்தின் எதிரேயுள்ள சுந்தர தீர்த்தக்கரையில் கருப்பண்ணசாமி எழுந்தருளி உள்ளார். இவருக்கு ஞாயிறு, வெள்ளி, செவ்வாய் முதலிய நாட்களில் பானகம் படைத்து வழிபட்டால் நாள்பட்ட நோய்களும் குணமாகி நிவாரணம் அளிக்கும். மனநிலை பாதிப்புள்ளவர்கள் 48 நாட்கள் பானகம் படைத்து வழிபடுவதன் மூலம் விரைவில் குணமடையும் என்றும் கூறப்படுகிறது.
ஜோஷ்டா தேவி
இந்த ஆலயத்தை வலம் வரும்போது அன்னை ஜோஷ்டா தேவியை தரிசனம் செய்யலாம். வலதுபுறம் தன் மகன் விருஷபன், இடதுபுறம் மகன் நமனை ஆகியோருடன் ஜோஷ்டா தேவி உள்ளார். விபத்து, ஆபத்துகள் நீங்கவும், சோம்பல் அகலவும், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் அகலவும், ஜோஷ்டாதேவி வழிபாடு துணை புரியும். நம் மனக் கவலைகள் எதுவானாலும் சரி, திருநெடுங்களம் சென்று வழிபட்டு வந்தால் நம்மை வாட்டி வதைக்கும் பிரச்சினைகளில் இருந்து ஈசன் விடுவிப்பார் என்பது நம்பிக்கை.
திருச்சியில் இருந்து கிழக்கே 19 கிலோமீட்டர் தொலைவில் திருநெடுங்களம் திருத்தலம் உள்ளது. திருச்சி- தஞ்சாவூர் சாலையில் துவாக்குடியில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலத்தை அடையலாம்.
மாதுளம் பழ அபிஷேகம்
திருநெடுங்களநாதருக்கு மாதுளம் பழ முத்துக்களால் நண்பகலில் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். அதுவும் வெள்ளை நிற மாதுளம் பழங்களால் அபிஷேகம் செய்வது பன்மடங்கு பலன்களை பெற்றுத்தரும் என்பது நம்பிக்கை. திருமணம் நிறைவேறுதல், கணவன்-மனைவி ஒற்றுமை, செல்வ வளம், வீடு, நிலம் வாங்க என யாவற்றிற்கும் மக்கள் இந்த மாதுளம் பழ அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.