அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ஆதீனங்கள்

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் பிரமாண்ட நுழைவுவாயிலை திறந்து வைத்து அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

Update: 2024-08-24 04:21 GMT

பழனி,

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 3-ம் படை வீடாக பழனி திகழ்கிறது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருவது உண்டு. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில மற்றும் வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.

பழனி மலை மீது அமர்ந்து பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சி தருகிறார். மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை மற்றும் ரோப்கார், மின்இழுவை ரெயில் வசதிகளும் உள்ளன. பழனியில் தமிழக இந்து சமயஅறநியைத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பழனியில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. மாநாட்டையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன. பழனி மலைக்கோவில் மின்னொளியில் ஜொலித்தது. பழனி நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.

இந்நிலையில் தமிழக இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' பழனியில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி உள்ளது. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை குன்றக்குடி மற்றும் பேரூர் ஆதீனங்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதனைத்தொடர்ந்து முத்தமிழ் முருகன் மாநாட்டின் பிரமாண்ட நுழைவுவாயிலை திறந்து வைத்த அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

முன்னதாக பழனியாண்டவர் கலை-பண்பாட்டு கல்லூரியில் அமைக்கப்பட்ட மாநாட்டு அரங்கத்தில் காலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், நாதஸ்வரம்-தவில் மங்கள இசையுடன் மாநாடு தொடங்கியது. காலை 8.55 மணிக்கு ரத்தினகிரி பாலமுருகனடி சுவாமிகள் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தார். உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி முன்னிலை வகித்தார். திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வேல் கோட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் சீர்காழி கோ.சிவசிதம்பரத்தின் இறைவணக்கத்துடன் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சியில் அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் அனைவரையும் வரவேற்கிறார். அதையடுத்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடக்கவுரை ஆற்றுகிறார். தருமபுரம் ஆதீனம் தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை நிகழ்த்துகின்றனர்.

பின்பு மாநாட்டு விழா மலர், ஆய்வு மலர் ஆகியவை வெளியிடப்படுகிறது. அதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், பி.புகழேந்தி, வி.சிவஞானம் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். முடிவில் அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் நன்றி கூறுகிறார்.

அதன்பிறகு காலை 11 மணி முதல் 11.45 மணி வரை 'உலகளாவிய உயர்வேலன்' என்ற தலைப்பில் மலேசியா தொழில்முனைவோர்-கூட்டுறவு துறை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டைமான், இங்கிலாந்து நாட்டின் இப்ஸ்விச் மேயர் இளங்கோ கே.இளவழகன், மலேசியா சிலாங்கூர் மாநில செயற்குழு உறுப்பினர் டி.எச்.பாப்பாராய்டு வேரமன், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஆறுமுகம் செந்தில்நாதன், ஆஸ்திரேலியாவை சேர்ந்த சந்திரிகா சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

பின்பு 11.45 மணியில் இருந்து 1 மணி வரை ஆன்மிக பேச்சாளர் சுகிசிவத்தின் 'முருகன் புகழ் வளர்க்கும் முத்தமிழில், முந்து தமிழ்' இயலா, இசையா, நாடகமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. பட்டிமன்றம் முடிந்ததும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை விடப்படுகிறது.

மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பாடல்கள், இசை நிகழ்ச்சி, நாட்டியம், பக்தி இன்னிசை ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. அதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் 'அடியார்க்கும் அருளும் அழகன்' என்ற தலைப்பில் 1 மணி நேரம் கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் மலேசியா பத்துமலை தான்ஸ்ரீ டத்தோ ஆர்.நடராஜா, எம்.சரவணன், ஜெயபாலன் வள்ளியப்பன், இலங்கை நாட்டின் இந்து சமய-கலாசார இயக்குனர் அனிருத்தனன் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த பரம்நந்தா ஆகியோர் பேசுகின்றனர்.

அதைத்தொடர்ந்து 5 மணி முதல் 6.15 வரை 'தேனிசையில் தெய்வ முருகன்', 'முத்தமிழ் இசையில் முருகன்' ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. பின்பு இரவு 6.15 மணி முதல் 7.20 மணி வரை சங்கீத நாடக அகாடமி விருதாளர் ஊர்மிளா சத்யநாராயணன் குழுவின் நாட்டியம் நடைபெறுகிறது. அதையடுத்து கலை பண்பாட்டு துறை சார்பில் கிராமிய இசை, நடன நிகழ்ச்சிகள் அரங்கேறுகிறது. பின்பு கலைமாமணி ராஜா குழுவின் திருமுருகன் திருக்கல்யாண நாடகத்துடன் முதல் நாள் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்