முக்தி வழங்கும் புன்னைநல்லூர் கோதண்டராமர்
கோதண்டராமர், சீதை, லட்சுமணர், சுக்ரீவன் சிலைகள் சாளக்கிராம கல்லால் செய்யப்பட்டிருப்பது இக்கோவின் தனிச்சிறப்பு ஆகும்.;
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில் கோதண்டராமர் கோவில் உள்ளது. தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப சிம்ம மகாராஜா ஆட்சியின் கீழ் (கி.பி.1739-1763) இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
தல வரலாறு
அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மக்களில் சிலர் திருமண நிகழ்ச்சியில் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படும் சாளக்கிராம கல்லை சீர்வரிசையாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். சாளக்கிராமம் என்பது நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும்.
நேபாள மன்னனும், தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னரும் சம்பந்தியானார்கள். அப்போது, நேபாள மன்னர், தஞ்சை மன்னருக்கு ஏராளமான தங்கம், வெள்ளி, விலை உயர்ந்த பட்டாடைகளை சீர் வரிசையாக வழங்கினார். எல்லாவற்றுக்கும் மேலாக பெரிய சாளக்கிராமக் கல்லையும் வழங்கினார்.
காலங்கள் உருண்டோடின. மராட்டிய மன்னர் பிரதாபசிம்ம மகாராஜா தஞ்சையை ஆண்டபோது, சீர்வரிசையாக வந்திருந்த சாளக்கிராமக் கல்லை கண்டார். அதை பார்த்ததும் மெய்சிலிர்த்து போனார். காரணம் பொதுவாகவே சாளக்கிராமக் கல், உள்ளங்கை அளவு அல்லது அதைவிட சற்று பெரிதாக இருக்கும். ஆனால் தஞ்சை மன்னருக்கு வழங்கப்பட்ட சாளக்கிராமக் கல் அளவில் பெரியது. அதனைக் கொண்டு அழகிய கோதண்டராமர், சீதை, லட்சுமணர், சுக்ரீவன் சிலைகளை வடிவமைக்க உத்தரவிட்டார். மேலும், ராஜ கோபுரத்துடன் கூடிய கோவிலையும் கட்டி எழுப்பினார்.
கோவில் அமைப்பு
இக்கோவிலில் கோதண்டராமர் மூலவராக உள்ளார். அவருடன் சீதை, லட்சுமணர் மற்றும் சுக்ரீவன் வீற்றிருக்கின்றனர். கோவிலின் ராஜகோபுரம் கட்டிடக் கலை நுணுக்கத்துடன் 5 நிலைகளுடன் கிழக்கு நோக்கி நிற்கிறது. அதனை கடந்து, கோவில் உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் இருக்கிறது. அங்கு அழகிய வட்டக்கல்லின் மீது கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கொடிக்கம்பத்தில் செப்பு தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன.
மகா மண்டபத்தின் உட்புற சுவர்களில் கருடாழ்வார், ஆஞ்சநேயர், ராமர் பட்டாபிஷேக காட்சிகள் தனிப்பெருமை கொண்ட தஞ்சை ஓவியப் பாணியில் தீட்டப்பட்டுள்ளன. இவை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ராமரின் வரலாற்றையும், ராமாயணத்தையும் கண்முன்னே நிறுத்தும் வகையில் அமைந்துள்ளது. கொடிமரத்தின் முன்பு பக்தர்களின் கஷ்டங்களை போக்கிடும் கருடாழ்வார் தனி சன்னிதி கொண்டுள்ளார். கருவறையின் முன்பு உள்ள மண்டபத்தின் நுழைவு வாசலின் இருபுறமும் துவார பாலகர்கள் கம்பீரமாக காட்சி கொடுக்கின்றனர்.
இக்கோவிலில் மூலவராக இருக்கும் சிலைகளை போல உற்சவராக அமைந்திருக்கும் ராமர், சீதை, லட்சுமணர் சிலைகளும் தனித்துவத்துடன் அமைந்துள்ளன. 96 வகையான விமானங்களில் சிறப்பு வாய்ந்த `சவுந்தர்ய விமானம்' இக்கோவிலில் அமைந்துள்ளது.
திருச்சுற்று வளாகத்தில் சங்கு சக்கரத்துடன் கூடிய தும்பிக்கை ஆழ்வார் சன்னிதி, மகாசுதர்சன மூர்த்தி சன்னிதி உள்ளது. இங்கு மகாசுதர்சன மூர்த்தி 16 திருக்கரங்களில் ஆயுதங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறார். சுதர்சன மூர்த்தியை முறையோடும், நெறியோடும் வழிபடுபவர்களுக்கு நல்ல உடல் நலமும், நீண்ட ஆயுளும், நீங்காத செல்வமும் கிடைக்கும்.
இக்கோவிலின் தல விருட்சமாக புன்னைமரம் அமைந்துள்ளது. அதன் அடிப்பகுதியில் ராமரின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஜெயவீர ஆஞ்சநேயர் தனிச் சன்னிதியில் இருக்கிறார்.
முக்தி தலம்
நேபாளத்தில் உள்ள முக்திநாத், சிறப்பான முக்தி தலமாக விளங்குகிறது. அதே போல் நோபாளத்தின் சாளக்கிராமக் கல்லில் செய்யப்பட்ட இந்த கோதண்டராமர் கோவிலும் முக்தியை வழங்குவதாக சொல்கிறார்கள். இத்தல கோதண்டராமரை துளசி மாலை சூட்டி வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பித்ரு தோஷம் நிவர்த்தியாகும், குடும்ப பிரச்சினைகள் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், நவக்கிரக ரீதியான கஷ்டங்கள் தீரும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.