இருமொழி கொள்கைக்காக நிதி உதவியை மறுப்பதா?

கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது.

Update: 2024-08-30 00:54 GMT

சென்னை,

கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது. இதில் மத்திய-மாநில அரசுகள் இரண்டுக்கும் பங்கு இருக்கிறது. இந்தநிலையில், மத்திய அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் 'சமக்ர சிக்ஷா அபியான்', அதாவது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்துக்கு தமிழக கல்வித் திட்டங்களுக்கு ஒதுக்கவேண்டிய பணத்தை மும்மொழி கொள்கையை பள்ளிக்கூடங்களில் நிறைவேற்றவில்லை என்ற ஒரு காரணத்துக்காக நிறுத்திவைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பள்ளிக்கூட கல்விக்காக பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக முதலில் 10 ஆண்டுகள், அதாவது கல்வி உரிமைச்சட்டம் அமலுக்குவரும் முன்பு 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் அமல்படுத்துவதற்காக 'சர்வ சிக்ஷா அபியான்' என்ற திட்டமும், அடுத்த 10 ஆண்டுகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான கல்விக்காக 'ராஷ்டிரிய மத்திம சிக்ஷா அபியான்' என்ற திட்டமும் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்த இருதிட்டங்களையும் ஒருங்கிணைத்து 'சமக்ர சிக்ஷா அபியான்' என்ற ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தது. இதன் மூலம் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட கல்வி சார்ந்த பல்வேறு செயல்பாடுகளுக்கு மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்போடு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டம் நாடாளுமன்றத்தில் முறைப்படி நிறைவேற்றப்பட்ட திட்டமாகும். பொதுவாக, மத்திய அரசாங்கம் ஒரு திட்டத்துக்கு நிதி ஒதுக்கும்போது அந்த திட்டத்துக்காக அதற்கு முந்தைய ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவழிக்கப்பட்டதா?, மிச்சம் இருக்கிறதா? என்பதை மட்டும் பார்த்துவிட்டு ஒதுக்கப்படும். இந்த திட்டத்துக்காக இந்த நிதியாண்டில் நாடு முழுவதுக்கும் ரூ.37,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கென ரூ.3,586 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசாங்கத்தின் பங்கு என்பது ரூ.2,152 கோடியாகும். தமிழக அரசின் பங்குத்தொகை ரூ.1,434 கோடியாகும். மத்திய அரசாங்கத்தின் நிதி ஒரு கல்வியாண்டில் 4 தவணையாக தரப்படும்.

நடப்பாண்டுக்கான முதல்தவணையாக ரூ.573 கோடி தரவேண்டியது, ஜூன் மாதம் முடிந்து ஆகஸ்டு மாதம் முடியப்போகிறது இன்னும் தரவில்லை. காரணம் கேட்டால், "நீங்கள் பி.எம். ஸ்ரீ கல்வித்திட்டத்தின்கீழ் மும்மொழி கல்வித்திட்டத்தை நிறைவேற்றவில்லை" என்று போகாத ஊருக்கு இல்லாத வழியை காட்டுகிறார்கள். பி.எம். ஸ்ரீ கல்வித்திட்டத்தை தமிழ்நாடு ஏற்கவில்லை என்று ஏற்கனவே சொல்லியாகிவிட்டது. மேலும், 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகு, தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கைதான் பின்பற்றப்படுகிறதேதவிர, 3-வது பாடமாக இந்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, இந்த காரணத்துக்காகவும், பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஏற்காததற்காகவும் தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை நிறுத்திவைத்திருப்பது நியாயமல்ல.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "நடப்பாண்டுக்கான ரூ.2,152 கோடியில் முதல்தவணையான ரூ.573 கோடியையும், முந்தைய ஆண்டுக்கான ரூ.249 கோடியையும் விடுவித்திடவேண்டும் எனவும், விவாதங்கள் தேவைப்படும் ஒரு கொள்கையினை கல்விக்கான நிதி வழங்கிடும் விஷயத்துடன் பொருத்திடக்கூடாது எனவும்'' தெரிவித்திருந்தார். 'சமக்ர சிக்ஷா அபியான்' திட்டத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுத்து அமலில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, அதில் குறிப்பிடப்படாத மும்மொழிக்கொள்கையை காரணம் காட்டி நிதியை நிறுத்திவைப்பது பெரும் அநீதியாகும். இதனால், "இந்த திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாது, கல்வித்திட்ட செயல்பாடுகளிலும் தொய்வு ஏற்பட்டுவிடும். பி.எம். ஸ்ரீ கல்வித்திட்டத்தை ஏற்றுக்கொண்டால்தான் சமக்ர சிக்ஷா அபியான் நிதி ஒதுக்கப்படும் என விதிமுறைகள் இல்லாதபோது எதற்காக நிதியை நிறுத்திவைக்கவேண்டும்" என்கிறார், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

Tags:    

மேலும் செய்திகள்