தமிழ்நாட்டுக்குள் வங்காளதேசத்தினர் ஊடுருவலா?

இந்தியாவுக்கும், வங்காளதேசத்துக்கும் இடையேயான எல்லை 4 ஆயிரத்து 96 கிலோ மீட்டர் நீளமாகும்

Update: 2024-09-03 01:27 GMT

சென்னை,

இந்தியாவின் அண்டை நாடு மட்டுமல்ல, இந்தியாவின் துணையால் உருவான நாடு வங்காளதேசம். சமீபத்தில் அங்கு உள்நாட்டு கலவரம் வெடித்தது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக அவர் பதவியிலிருந்து விலகியது மட்டுமல்லாமல், இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அங்கு இப்போது இடைக்கால அரசாங்கம் நடந்துவருகிறது.

வங்காளதேசத்தில் பெரிய தொழில் என்றால், அது ஜவுளி தொழில்தான். அந்த தொழிற்சாலைகளெல்லாம் இப்போது மூடிக்கிடக்கின்றன. ஏற்கனவே, அங்கு இளைஞர்கள் வேலையில்லாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இப்போது பணியாற்றிய தொழிலாளர்களும் வேலையிழந்து இருக்கிறார்கள். இப்படி ஒரே நேரத்தில் எல்லோரும் எங்கேபோய் வேலை தேடுவது? என்று தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு புகலிடமாக தெரிவது இந்தியாதான். வங்காளதேசத்தினரும் மேற்கு வங்காள மக்களும் ஒரேபோல் இருப்பதால், அவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவிவிட்டால், யாராலும் அவர்களை கண்டுபிடிக்க முடியாது.

மேலும், இந்தியாவுக்கும், வங்காளதேசத்துக்கும் இடையேயான எல்லை 4 ஆயிரத்து 96 கிலோ மீட்டர் நீளமாகும். அந்த எல்லையை தாண்டினால் அசாம், திரிபுரா, மிசோரம், மேகாலயா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை அடைந்துவிடலாம். அங்கிருந்து கடந்த மாதம் 27-ந்தேதி இரவு அசாம் எல்லைக்குள் 3 வங்காளதேசத்தினர் ஊடுருவ முயன்றபோது பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி மீண்டும் வங்காளதேசத்துக்குள் அனுப்பிவிட்டனர். இதுவரையில் இப்படி 50 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், கண்ணை மறைத்து ஊடுருவியவர்கள் எத்தனை பேரோ?.

திரிபுரா மாநிலத்திலும் இதேபோல் ஊடுருவ முயன்று பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், நாங்கள் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூருக்கு செல்ல திட்டமிட்டு வந்ததாக கூறினர். அங்குபோனால், நாங்கள் ஏதாவது ஒரு ஜவுளி ஆலைகளில் வேலைக்கு சேர்ந்துவிட முடியும் என்பதால், தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்ததாக கூறியிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த தகவல்களையெல்லாம் குறிப்பிட்டு, வங்காளதேசத்தில் இருந்து ஊடுருபவர்களெல்லாம் தமிழ்நாட்டில் வேலைக்கு சேர்ந்து விடலாம் என்ற நோக்கத்தோடுதான் இந்தியாவுக்குள் நுழைகிறார்கள்.

எனவே, தமிழக அரசு கோயம்புத்தூர் போன்ற இடங்களில் உள்ள ஜவுளி ஆலைகளில் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளவர்களின் விவரங்களை சோதனை செய்ய வேண்டும். அங்கிருந்து வருபவர்கள் அரசியல் அகதிகள் அல்ல, பொருளாதார அகதிகள். இப்போது தடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை இந்தியாவுக்குள் வந்தவர்களில் 10 சதவீதம்தான் என்று கூறியுள்ளார். அசாம், மேகாலயா மட்டுமல்லாமல், இன்னும் மற்ற மாநிலங்கள் வழியாக எத்தனை பேர் தமிழ்நாட்டுக்குள் வந்திருப்பார்கள்? என்று தெரியவில்லை. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்றாலும் வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் முறையான அனுமதியில்லாமல் வந்த புலம் பெயர்ந்தவர்கள் என்ற வகையில் அவர்களை கண்டுபிடித்து அவர்கள் தொடர்பான விவரங்களை திரட்டுவது போலீசாரின் தலையாய பணியாகும்.

கோயம்புத்தூர், திருப்பூரிலும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த நிறைய பேர் பணிபுரியும் சூழ்நிலையில், அவர்களைப் போன்றே தோற்றமளிக்கும் வங்காளதேச அகதிகள் எத்தனை பேர் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள்? என்பதைக் கண்டுபிடித்து, இதுகுறித்து ஒரு கொள்கை முடிவை மத்திய அரசாங்கம் மூலமாக தமிழக அரசு எடுக்க வேண்டும்.


Tags:    

மேலும் செய்திகள்