குளங்களுக்கு புத்துயிரூட்ட வேண்டும் !
தமிழ்நாட்டில் தற்போது 7,828 குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன
சென்னை,
பழைய காலங்களில் இப்போது இருப்பதுபோல அணைகள் இல்லை. ஆனால், ஊருக்கு ஊர் குளங்கள், ஏரிகள் இருந்தன. மற்றபடி ஆறுகளும் இருந்தன. அப்போதெல்லாம் தொழிற்சாலைகள் இல்லாத நிலையில், விவசாயம்தான் மக்களுக்கு முக்கிய தொழிலாக இருந்தது. குறுநில மன்னர்களும், ஜமீன்தார்களும் தங்கள் மக்களுக்காக குளங்களை அதிக அளவில் வெட்டினர். ஒவ்வொரு ஊரிலும் குறைந்தபட்சம் ஒரு குளமாவது இருந்தது. நமது கலாசாரப்படி கோவில்களிலும் தெப்பக் குளங்கள் இருந்தன. இந்த குளங்களால்தான் விவசாயம் நடந்தது, குடி தண்ணீரையும் அங்கு இருந்துதான் எடுத்தனர். ஏன் மக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும், ஆடு-மாடுகளுக்காகவும் குளத்து தண்ணீரைத்தான் நம்பிக்கொண்டு இருந்தனர்.
அனைத்து இடங்களிலும் உள்ள குளங்களால் மற்றொரு பெரிய பயன் என்னவென்றால், அந்த குளங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரால் அருகில் உள்ள கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. ஊற்று பெருக்கெடுத்தோடியது. குளத்தினால் மக்கள் பெற்ற அனைத்து பயன்களையும் கிணறுகளாலும் பெற்றனர். குளத்து தண்ணீரைக் கொண்டு விவசாயம் செழிப்பாக நடந்த அளவு, இப்போது அணைக்கட்டுகள் நிறைய கட்டிய பிறகு இல்லை. காரணம், குளத்தை காக்க அனைவரும் மறந்துவிட்டோம். இதுபோல கிணறுகளும் தூர்ந்து போய்விட்டன. பல இடங்களில் குளங்கள் மேடிட்டு போய் மைதானமாகிவிட்டன. பருவ நிலைமாற்றமும் புவி வெப்பமயமாதலும் மழை பெய்யும் முறையை மாற்றிவிட்டது.
எப்போது மழை பெய்யும், அது கோடை காலத்திலா?, மழை காலத்திலா? என்று தெரியாத அளவில், மழை எப்போது வேண்டுமானாலும் பெய்கிறது. ஆகவே, மழை பெய்யும்போது தண்ணீரை சேமித்துவைக்க குளங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டில் இப்போது 41,127 குளங்கள் இருக்கின்றன. இதன் கொள்ளளவு 347 டி.எம்.சி.யாகும். இது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளின் கொள்ளளவையும்விட அதிகமாகும். குளங்கள் மூலம் விவசாயம் செய்வதும், அந்தந்த பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதும் மிக எளிது.
இப்போது ஏராளமான குளங்களை காணவில்லை. இதற்கு காரணம் பல குளங்கள் நகரமயமாக்குதலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. குளங்கள் மட்டுமல்லாமல், அந்த குளங்களுக்கு மழைகாலங்களில் தண்ணீர் ஓடிவரும் சிறு சிறு வாய்க்கால்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்கள் எழும்பிவிட்டன. பல குளங்களுக்கு கரைகளே இல்லை. தமிழ்நாட்டில் தற்போது 7,828 குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய ஆக்கிரமிப்புகளால், தமிழ்நாட்டில் குளத்து பாசனம் மூலம் சாகுபடி செய்யும் விவசாய நிலப்பரப்பு மிக குறைந்துவிட்டது.
பல ஆண்டுகளுக்கு முன்பு 9.36 லட்சம் ஹெக்டேராக இருந்த குளத்து சாகுபடி விவசாய நிலப்பரப்பு இப்போது 3.99 லட்சம் ஹெக்டேராக சுருங்கிவிட்டது. இதுமட்டுமல்லாமல், அனைத்து குளங்களிலும் ஆகாயத்தாமரை படர்ந்து குளத்தின் ஆழத்தை குறைத்துவிட்டது. அனைத்து குளங்களையும் உடனடியாக செப்பனிட்டு சீரமைத்து அதன் கொள்ளளவை உயர்த்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் இதுதான். கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டத்தை மிக வேகமாக செயல்படுத்தவேண்டும். ஆகாயத்தாமரையை முற்றிலுமாக ஒழிக்க ஒரு சிறப்பு திட்டத்தை அரசு கையில் எடுக்கவேண்டும்.
ஐகோர்ட்டு ஏற்கனவே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும், குளங்கள் இருக்கும் இடங்களில் கட்டுமான பணிகளுக்கு அனுமதிக்கக்கூடாது என்று அளித்த தீர்ப்புகளை வார்த்தை தவறாமல் நிறைவேற்றவேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் உள்ள குளங்கள் எப்போதும் நீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கவேண்டும்.