பல தடைகளைத் தாண்ட வேண்டும்!
40 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் கமிஷன் பரிந்துரைத்த ஒரே நாடு; ஒரே தேர்தலுக்கான சட்டப்பூர்வ முயற்சிகள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தொடங்கிவிட்டது
சென்னை,
40 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் கமிஷன் பரிந்துரைத்த ஒரே நாடு; ஒரே தேர்தலுக்கான சட்டப்பூர்வ முயற்சிகள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தொடங்கிவிட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அதாவது, 1952, 1957, 1962, 1967-ம் ஆண்டுகளில் ஒரே நேரத்தில்தான் நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. 1968, 1969-ம் ஆண்டுகளில் சில சட்டசபைகள் அதன் பதவி காலத்துக்கு, அதாவது 5 ஆண்டுகளுக்கு முன்பே கவிழ்ந்ததால் இந்த சக்கரம் சுழல்வதில் சிக்கல் ஏற்பட்டது. சில மாநில அரசுகள் மத்திய அரசாங்கத்தால் கவிழ்க்கப்பட்டதாலும், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' நடைமுறைக்கு தடை வந்தது.
4-வது மக்களவையும் அதன் முழு பதவி காலத்துக்கு முன்பே 1970-ல் கலைக்கப்பட்டு 1971-ல் தேர்தல் நடந்தது. 5-வது மக்களவை நெருக்கடி நிலை பிரகடனத்தால் அதன் பதவி காலம் 1977 வரை நீட்டிக்கப்பட்டது. இதுபோன்ற பல காரணங்களால், மக்களவை தேர்தல் நடக்கும் நேரத்தில் சட்டசபை தேர்தல்களையும் நடத்த முடியாமல் போய்விட்டது. இத்தகைய சூழ்நிலையில், 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திரமோடி, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்தை முன்மொழிந்தார். இந்த திட்டத்தை ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நாடு முழுவதும் 21,500 பேரிடம் கருத்துகளைப்பெற்றது. இதில் 80 சதவீத கருத்துகள் ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆதரவாகவே இருந்தது. இதுபோல், இந்த திட்டம் குறித்து கருத்துகள் அனுப்பிய 47 அரசியல் கட்சிகளில், 32 கட்சிகள் ஆதரவாகவும், 15 கட்சிகள் எதிராகவும் இருந்தன.
இதையெல்லாம் அடிப்படையாக வைத்து, ராம்நாத் கோவிந்த் குழு கடந்த மார்ச் மாதம், 18 ஆயிரம் பக்கங்கள் கொண்ட தன் அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை நன்கு பரிசீலித்த மத்திய அரசாங்கம், 2 மசோதாக்களை தயார் செய்து மத்திய மந்திரிசபையின் ஒப்புதலை கடந்த 12-ந் தேதி பெற்றது. அதனைத்தொடர்ந்து, 2 மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டன. மக்களவையில் இந்த மசோதாக்களை தாக்கல் செய்ய 269 பேர் ஆதரவாகவும், 189 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இனி இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மக்களவையில் உள்ள 543 உறுப்பினர்களில் 362 பேரின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும். ஆனால், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 உறுப்பினர்களே உள்ளனர்.
இதுபோல, மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களில் 164 பேரின் ஆதரவு தேவைப்படும் பட்சத்தில், பா.ஜனதாவுக்கு 112 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. இந்த நிலையில், இந்த இரு மசோதாக்களும் 31 எம்.பி.க்கள் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த குழு 90 நாட்களில் தனது பரிந்துரையை அனுப்பவேண்டும். கால நீட்டிப்புக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த குழுவின் பரிசீலனை முடிந்து எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெற்றால்தான் இந்த மசோதாக்கள் நிறைவேற முடியும். ஆக, பல தடைகளைத்தாண்டி, மாநில சட்டசபைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவைப்பெற்ற பிறகுதான் இந்த நடைமுறை அடுத்த படியில் அடியெடுத்து வைக்கமுடியும்.