மருத்துவ கழிவுகளை கொட்டும் கிடங்கா தமிழ்நாடு?

நெல்லையில் உள்ள நீர்நிலைகள் அருகே கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

Update: 2024-12-20 00:52 GMT

சென்னை,

சென்னையில் உள்ள தென் மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் உறுப்பினர் சத்தியகோபால் ஆகியோர் வழங்கிய ஒரு பரபரப்பான கண்டனம் கேரள மாநில எல்லையில் உள்ள தமிழக மாவட்ட மக்கள் நீண்ட காலமாக அனுபவித்து வரும் ஒரு தூய்மை கேட்டை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. கேரள எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள், மீன் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை இரவோடு இரவாக கொண்டுவந்து கொட்டும் அவலம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

கேரளாவில் தினமும் 70 டன் அளவுக்கு மருத்துவ கழிவுகள் உருவாகிறது. ஆனால் அங்கு இதை சுத்திகரிப்பு செய்யும் திறன் 16 டன்களுக்கு மட்டுமே உள்ளது. எனவேதான் இந்த மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து கொட்டும் நிகழ்வுகள் தொடர்கதையாக இருக்கிறது. இத்தகைய மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளால் தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு மட்டும் இல்லாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு நோய்-நொடிகளுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. ஈ, கொசு தொல்லைகள் மட்டுமல்லாமல் இந்த கழிவுகளில் இருந்து புழுக்களும் உருவாகின்றன.

சமீபத்தில் நெல்லை அருகே நடுக்கல்லூர், பழவூர், கொண்டாநகரம், சீதபற்பநல்லூர் மற்றும் கோடகநல்லூர் கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் அருகே கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு மணல் உள்ளிட்ட கனிம வளங்கள், அரிசி, காய்கறிகள், பழங்கள் போன்ற பல பொருட்கள் ஏற்றி செல்லப்படுகின்றன. அங்கு போய் இந்த சரக்குகளை இறக்கிவிட்டு தமிழ்நாட்டுக்கு திரும்பும் லாரிகளில் இந்த கழிவுகள் ஏற்றிக்கொண்டுவரப்பட்டு இங்கு அதை ஒரு குப்பை கிடங்கில் கொட்டுவதுபோல கண்ட இடங்களில் விவசாய நிலங்களிலும், நீர் நிலைகளிலும் இரவோடு இரவாக கொட்டிவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

சில இடங்களில் பொதுமக்கள் அதை கையும் களவுமாக பிடித்து திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். இதை தடுத்து நிறுத்த தமிழக அரசு கடிதம் எழுதியும் பயனில்லை. எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்க தொடங்கிவிட்டன. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, "கேரள கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும். இல்லையென்றால் வரும் ஜனவரி முதல் வாரத்தில் பொதுமக்களை திரட்டி இந்த கழிவுகளை லாரிகளில் ஏற்றிக்கொண்டுபோய் கேரளாவில் கொட்டுவோம். முதல் லாரியில் நானும் செல்வேன்" என்று தெரிவித்துள்ளார். இதுபோல எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கடும் கண்டனம் தெரிவித்துவிட்டு "வளமிகு தமிழ்நாடு யாருடைய குப்பை தொட்டியும் அல்ல" என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில், தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கின்போது முறைப்படி மருத்துவ கழிவுகளை அகற்ற தேவையான வசதிகளை மேற்கொள்ளாமல் ஏன் அந்த ஆஸ்பத்திரிகளுக்கு கேரள அரசாங்கம் அனுமதி வழங்கவேண்டும்? என்று கேட்டுவிட்டு, தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசாங்கமே பொறுப்பேற்று அகற்றவேண்டும் என்று நேற்று உத்தரவிட்டுள்ளது. ஆக மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கு அனைத்து தரப்பில் இருந்தும், பொதுமக்களிடம் இருந்தும் எதிர்ப்பு அலைகள் கிளம்பிவிட்டன. தமிழக அரசு உடனடியாக எல்லைப்புறங்களில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தவேண்டும். மேலும் இதை கேரள அரசுக்கு அழுத்தமாக தெரிவித்து அங்கிருந்து மருத்துவ கழிவுகள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்