இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த குகேஷ்!

தமிழக வீரரான குகேஷ், செஸ் விளையாட்டில் இளம் வயதிலேயே உலக சாம்பியனாக வெற்றிபெற்று சரித்திர சாதனை படைத்துள்ளார்.

Update: 2024-12-14 00:51 GMT

செஸ் விளையாட்டின் தேவதையான கால்ஸ்சா இப்போது தமிழ்நாட்டைப் பார்த்து புன்னகைத்து கொண்டிருக்கிறார். செஸ் விளையாட்டு பிறந்த பூமி தமிழ்நாடுதான். பழங்கால மன்னர்கள் சதுரங்கம் என்ற பெயரில் விளையாடியது நமது இலக்கியங்களிலும், காவியங்களிலும் கூறப்பட்டுள்ளது. அந்த சதுரங்க விளையாட்டுதான் இப்போது உலக அரங்கில் செஸ் விளையாட்டாக உருவெடுத்துள்ளது.

இயற்கையாகவே செஸ் விளையாட்டு தமிழர்களின் ரத்தத்தோடு ஊறிய ஒன்று. பல வீடுகளில் சிறுவர்கள், பெண்களெல்லாம் பொழுதுபோக விளையாடுவது செஸ்தான். சிறு வயதிலேயே செஸ் விளையாடினால் சிந்தனை ஆற்றல் வளரும், புத்தி கூர்மையாகும், மனது ஒரு நிலைப்படும் என்பது தமிழர்களின் எண்ணமாக இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புகூட 176 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு சிறப்பாக நடத்திக் காட்டி, உலக நாடுகளை திரும்பி பார்க்கவைத்தது.

இப்போது, மேலும் ஒரு பெருமையாக தமிழக வீரரான சென்னை மாணவர் குகேஷ், செஸ் விளையாட்டில் இளம் வயதிலேயே உலக சாம்பியனாக வெற்றிபெற்று சரித்திர சாதனை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன் போட்டி சிங்கப்பூரில் உள்ள செண்டோசா தீவில் நடந்தது. இதற்கு முன்பு தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை பெற்றிருக்கிறார். கடைசியாக 2012-ம் ஆண்டு நடந்த போட்டியில் வெற்றி பெற்றதுடன், அதற்கு அடுத்த ஆண்டு சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அந்த தோல்விதான் குகேஷை ஒரு சாம்பியனாக உருவெடுக்க விதைபோட்டது. அப்போது குகேசுக்கு வயது 7. பார்வையாளர் மாடத்தில் இருந்து விஸ்வநாதன் ஆனந்தும், நார்வே நாட்டு வீரர் மாக்னஸ் கார்ல்சென்னும் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்த போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்ததை சிறுவன் குகேஷால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அப்போதே சிறுவன் குகேஷ் மனதில் ஒரு உறுதியை எடுத்தான். "இந்தியா இழந்த இந்த உலக சாம்பியன்ஷிப் கோப்பையை நான் மீண்டும் கொண்டுவருவேன்" என்ற உறுதிப்பாட்டுடன் கடுமையான பயிற்சியை மேற்கொள்ள தொடங்கினான். அதன் விளைவாக, 12 வயதிலேயே 'கிராண்ட் மாஸ்டர்' அந்தஸ்தைப் பெற்றார். 'வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்' என்ற வகையில், பல வெற்றிகளை குவிக்கத் தொடங்கினார். இப்போது நடந்த போட்டியில், ஏற்கனவே உலக சாம்பியனான சீனா நாட்டை சேர்ந்த டிங் லிரெனோடு மோதுவது யார் என்பதை நிர்ணயிக்க நடந்த கேண்டிடேட் செஸ் போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 8 வீரர்களில் குகேசும் இடம்பெற்றிருந்தார். அதை நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட குகேஷ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன் சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி, உலகிலேயே மிகக் குறைந்த வயதில் உலக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

18-வது உலக செஸ் சாம்பியனாக சென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 18 வயது தமிழர் ஜொலித்தது இந்தியாவுக்கு மட்டுமல்ல ஆசியா கண்டத்துக்கே பெருமை தேடித்தந்தது. உலக முதல் செஸ் சாம்பியனான வில்ஹெம் ஸ்டெயினிட்ஸ், 'செஸ் விளையாட்டு கோழை ஆன்மாக்களுக்கானது அல்ல' என்று சொன்னதைப்போல, இந்த வீரர் தன் மன உறுதியாலும், திடமான நம்பிக்கையாலும், சலியாத முயற்சியினாலும் இந்த வெற்றிக் கனியை பறித்திருக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்