பிஞ்சு உள்ளங்கள் சோர்ந்து விடக்கூடாது

தமிழ்நாட்டில் 8-வது வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்பதே தொடரும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தது பாராட்டுக்குரியது.;

Update:2025-01-10 07:39 IST

சென்னை,

கல்விதான் ஒருவர் வாழ்வின் முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கே அடிப்படையான ஒன்றாகும். தனிநபருக்கு மட்டுமல்ல சமுதாயத்துக்கே கல்வி வளர்ச்சிதான் அனைத்து வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஒன்றாகும். அதனால்தான் மத்திய அரசாங்கம் மட்டுமல்லாமல் தமிழக அரசு உள்பட அனைத்து மாநில அரசுகளும் கல்வியை மேம்படுத்துவதற்காகவும், அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைவதற்காகவும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. தொடக்கக்கல்வி முதல் இளம் பிஞ்சுகளுக்கு இருக்கும் ஆர்வம்தான் அவர்கள் உயர்கல்வியில் மிளிர்வதற்கும் வழிகாட்டுவதாக இருக்கிறது.

சிறுவயதில் பள்ளிக்கூடத்துக்கு செல்வது என்பது இனிமையாக இருக்கவேண்டும். அப்போதுதான் கற்றலிலும் இனிமை என்ற முறையில் அனைத்து மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்கமுடியும் என்ற வகையில் பாடத்திட்டங்களும், கற்பித்தல் முறைகளும் வகுக்கப்படுகிறது. சின்னஞ்சிறு வயதில் மாணவ பருவத்தில் எந்தவித ஏமாற்றங்களையும், வலிகளையும், சோர்வுகளையும் தாங்கிக்கொள்ளமுடியாது என்ற வகையில்தான் 8-வது வகுப்பு வரை 'ஆல் பாஸ்' என்ற நடைமுறை இவ்வளவு நாளும் நடைமுறையில் இருந்தது.

மத்திய அரசாங்கம் கடந்த 2010-ல் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கொண்டுவந்தது. இந்த சட்டத்தின் கீழ் அனைவருக்கும் கல்வி என்பது கட்டாயமாக்கப்பட்டது. இது ஒரு நல்ல தொடக்கமாக இருந்தது. ஆரம்பத்தில் இந்த சட்டத்தின் கீழ் 5-வது வகுப்பிலும், 8-வது வகுப்பிலும் ஆண்டு தேர்வு எழுத வேண்டும். ஆனால் 'ஆல் பாஸ்', யாரும் 'பெயில்' ஆகிவிட்டார்கள் என்று அதே வகுப்பில் மீண்டும் படிக்க தேவையில்லை என்றுதான் இருந்தது. 2019-ல் இந்த சட்டத்தில் கொண்டுவந்த திருத்தத்தின்படி, இந்த இரு வகுப்புகளிலும் அதாவது 5-வது வகுப்பு, 8-வது வகுப்புகளில் நடக்கும் ஆண்டு இறுதி தேர்வில் தோல்வி அடைந்தால் அடுத்த வகுப்புக்கு போகமுடியாது. அதே வகுப்பில் மீண்டும் படிக்கவேண்டும் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டது.

இப்போது மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ள இலவச கட்டாய குழந்தை கல்விக்கான உரிமை திருத்தத்தில் உள்ள விதிகளின்படி இனி 8-வது வகுப்பு வரை அனைவரும் 'பாஸ்' என்பது கிடையாது. 5-வது வகுப்பிலும், 8-வது வகுப்பிலும் இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அடுத்த வகுப்புக்கு போகமுடியும். தோல்வி அடைந்தால் அடுத்த 2 மாதங்களுக்குள் நடத்தப்படும் மறுதேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். அப்படி தேர்ச்சி பெற்றால் அடுத்த வகுப்புக்கு சென்றுவிடலாம். இல்லையென்றால் அதே வகுப்பில்தான் மீண்டும் படிக்கவேண்டும் என்று கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்தின் நடைமுறை மத்திய அரசாங்கத்தின் பள்ளிக்கூடங்களான கேந்திரிய வித்யாலயா பள்ளி, நவோதயா பள்ளி, சைனிக் பள்ளி ஆகிய 3 ஆயிரம் பள்ளிக்கூடங்களுக்குத்தான் பொருந்தும்.

மாநிலங்கள் அவரவர் முடிவு செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு மிக நல்ல முடிவை எடுத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழ்நாட்டில் மாநில கல்விக்கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில் மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் பிற பள்ளிகளுக்கு பொருந்தாது. தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டுவரும் 8-வது வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்பதே தொடரும் என்பதை அழுத்தம், திருத்தமாக தெரிவித்தது பாராட்டுக்குரியது. மத்திய அரசாங்கமும் தன் பள்ளிக்கூடங்களில் இந்த நடைமுறையை கொண்டுவருவதை மறுபரிசீலனை செய்யவேண்டும். எந்த காரணத்தை கொண்டும் பிஞ்சு உள்ளங்கள் படிக்கிற காலத்தில் சோர்ந்துவிடக்கூடாது.

Tags:    

மேலும் செய்திகள்