தமிழகம் வழி காட்டியது
தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக்காக்கும் 48’ திட்டம் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து நடைமுறையில் இருக்கிறது.;
காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்களுக்கு பலனளிக்கும் பல நல்ல திட்டங்கள் நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக அமைந்துள்ளன. இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றும் பல திட்டங்களும் மற்ற மாநிலங்களால் பின்பற்றப்படுகின்றன. அந்த வரிசையில், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் 'இன்னுயிர் காப்போம் - நம்மைக்காக்கும் 48' திட்டம் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் ஏதாவது விபத்து ஏற்பட்டால் அதில் பாதிக்கப்பட்டவர்கள் கையில் பணம் இல்லாத ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்றால் விபத்து நடந்த இடத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு செல்லப்படுவார்கள்.
ஆனால் அருகிலேயே தனியார் ஆஸ்பத்திரிகள் இருந்தாலும் பணம் இல்லாத காரணத்தால் அங்கு செல்ல முடியாத நிலை இருக்கும். மருத்துவ நெறிப்படி விபத்து நடந்தவுடன் அடுத்த ஒரு மணி நேரம் நோயாளியின் உயிரை காப்பாற்றுவதற்கான தங்கமான நேரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தங்கமான நேரத்தில் அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றமுடியும். விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முதல் 48 மணி நேரத்தில் எந்த ஆஸ்பத்திரியிலும் ரூ.1 லட்சம் மதிப்பிலான சிகிச்சை அளிக்க வகை செய்வதுதான் 'இன்னுயிர் காப்போம்-நம்மைக்காக்கும் 48' திட்டத்தின் நோக்கமாகும்.
முதல் 48 மணி நேரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் இந்த ஒரு லட்ச ரூபாய்க்கு சிகிச்சை பெற்றுக்கொண்டு, பிறகு உடல்நிலை சற்று சீரானவுடன் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படலாம். இந்த திட்டத்தின் கீழ் கடந்த 7-ந்தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்த 3 லட்சமாவது பயனாளியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார். இப்போது இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறப்படும் தொகைக்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இந்த திட்டத்துக்காக ரூ.261 கோடியே 46 லட்சம் அரசு செலவழித்து இருக்கிறது.
இந்த திட்டம் மத்திய அரசாங்கத்துக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது. இதேபோல ஒரு திட்டத்தை மத்திய அரசாங்கமும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அதில் சிகிச்சை தொகை ரூ.1.50 லட்சம் ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இந்த தொகை மூலம் 7 நாட்களுக்கு சிகிச்சை பெறமுடியும். உயிரிழந்தால் அந்த குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீட்டு தொகையாக வழங்கப்படும். இந்த திட்டம் பரீட்சார்த்தமாக அசாம், பஞ்சாப், உத்தரகாண்ட், புதுச்சேரி, அரியானாவில் நிறைவேற்றப்பட்டு, இதுவரை 6 ஆயிரத்து 840 பேர் பயனடைந்துள்ளனர். இந்த திட்டம் வருகிற மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அப்போது தமிழ்நாட்டில் 2 திட்டங்கள் அமலில் இருக்கும் என்பதால் இரு திட்டங்களையும் ஒருங்கிணைத்து மக்களுக்கு அதிக பலன் அளிக்கும் வகையில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் பல்வேறு சிகிச்சைகளுக்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தையும் மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று விடுக்கும் கோரிக்கையையும் மத்திய-மாநில அரசுகள் பரிசீலிக்கவேண்டும்.