ஏமாற்றம் அளித்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

உலகம் முழுவதும் ஜி.எஸ்.டி. வரி என்பது அரசாங்கங்களுக்கு பணத்தை வாரி கொடுக்கும் எந்திரம் என்றே கருதப்படுகிறது.

Update: 2024-12-25 00:50 GMT

சென்னை,

உலகம் முழுவதும் ஜி.எஸ்.டி. வரி என்பது அரசாங்கங்களுக்கு பணத்தை வாரி கொடுக்கும் எந்திரம் என்றே கருதப்படுகிறது. 136 நாடுகளில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமலில் இருந்தாலும் பெரும்பாலான நாடுகளில் மயில் இறகால் வருடுவது போலத்தான் எந்தவித குழப்பமும் இல்லாமல் ஒரே வரிவிதிப்பு விகித முறையில் வசூலிக்கப்படுகிறது. இந்தியா, கனடா, ஐரோப்பிய யூனியனில் நார்வே தவிர மற்ற நாடுகள், பிரேசில் போன்ற நாடுகளில்தான் பல விகிதங்களில் வரி இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை 0, 3, 5, 12, 18, 28 ஆகிய விகிதங்களில் வரி இருக்கிறது.

இந்த அதிகப்படியான வரி விகிதங்களால் பல குழப்பங்கள் இருக்கின்றன. சமீபத்தில் கோயம்புத்தூரில் இந்த வரி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஒரு பிரபல ஓட்டல் அதிபர் "வெறும் பன்னை வாங்கி சாப்பிட்டால் 5 சதவீதம் வரியும், அந்த பன்னிலேயே ஜாம் தடவினால் 18 சதவீதமும் வரி நிர்ணயிக்கப்பட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. விவரம் தெரிந்த வாடிக்கையாளர்கள் நீங்கள் பன்னையும், ஜாமையும் தனித்தனியாக தாருங்கள், நீங்கள் பன்னில் ஜாமை தடவி தருவதற்கு பதிலாக நாங்களே தடவி சாப்பிட்டுக்கொள்கிறோம். 18 சதவீதத்துக்கு பதிலாக 5 சதவீதம்தான் எங்களுக்கு வரி இருக்கும் என்று சொல்லிவிடுகிறார்கள்" என்றார்.

இதுபோன்ற பல குழப்பங்களை சரிசெய்வதற்காகத்தான் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி மந்திரிகள் கலந்துகொள்ளும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் அவ்வப்போது நடக்கிறது. அந்தவகையில், கடந்தவாரம் 55-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மர் நகரில் நடந்தது. இந்த கூட்டத்தில் 148 பொருட்கள், சேவைகளுக்கு வரிமாற்றம் இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. சிகரெட், குளிர்பானங்கள் போன்ற சில பொருட்களுக்கு 35 சதவீதம் என்ற புதிய வரிவிதிப்பு கொண்டுவரப்பட்டு, அதன்கீழ் இந்த பொருட்கள் கொண்டுவரப்படும்.

இதில் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு மருத்துவ காப்பீடு மற்றும் இன்சூரன்சு பாலிசிகள் மீதான பிரீமியத்தின் மீது விதிக்கப்படும் 18 சதவீதத்தை ரத்து செய்து, அதன் இழப்பு சரிக்கட்டப்படும் என்றும் கருத்துகள் பரிமாறப்பட்டது. ஆனால் எந்த எதிர்பார்ப்புகளும் இந்த கூட்டத்தில் நிறைவேறவில்லை. பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்கள், மின்சார வாகனங்கள் விற்பனையில் 12 சதவீத வரி விதிப்புக்கு பதிலாக இனி 18 சதவீதம் விதிக்கப்படும் என்று எடுக்கப்பட்ட முடிவு பழைய கார்களை வாங்குபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

எல்லோரும் விரும்பி சாப்பிடும் 'பாப்கார்'னுக்கு உப்பு மற்றும் மசாலா சேர்க்கப்படாத 'பாப்கார்ன்' பாக்கெட்டுகளில் அடைக்கப்படவில்லையென்றால் 5 சதவீதமும், அதையே பாக்கெட்டில் அடைத்து விற்றால் 12 சதவீதமும், இனிப்பு கலந்தால் 18 சதவீத ஜி.எஸ்.டி.யும் விதிக்கப்படும் என்று எடுக்கப்பட்ட முடிவும் 'பாப்கார்னை' கசப்பாக்கிவிட்டது. இதையெல்லாம் விட மருத்துவ காப்பீடு மற்றும் இன்சூரன்சு பிரீமியத்தின் மீது விதிக்கப்படும் 18 சதவீத ஜி.எஸ்.டி. குறித்து எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் தள்ளிப்போட்டிருப்பது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் புற்றுநோய் மரபணு சிகிச்சைக்கான ஜி.எஸ்.டி.யை கைவிடவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. என்றாலும் ஒட்டுமொத்தமாக பார்த்தால் மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நிறைவேற்றாமல் ஏமாற்றம் தருவதாகவே அமைந்திருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்