மருத்துவ படிப்புகளில் ஜொலிக்கும் மாணவிகள்!

இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வை நாடு முழுவதும் 23 லட்சத்து 33 ஆயிரத்து 162 மாணவர்கள் எழுதினார்கள்.

Update: 2024-09-05 00:53 GMT

இந்தியாவின் மருத்துவ நகரமாக விளங்கும் சென்னையை தலைநகரமாக கொண்ட தமிழ்நாட்டில் மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 22 சுயநிதி கல்லூரிகளும், 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளும் இருக்கின்றன. இதில், மருத்துவம் படிக்க மொத்தம் 10,350 இடங்கள் எம்.பி.பி.எஸ். மற்றும் பல்மருத்துவ படிப்பான பி.டி.எஸ். படிப்புகளுக்கு இருக்கின்றன. இந்த படிப்புகளில் சேர 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.

இந்த ஆண்டு 'நீட்' தேர்வை நாடு முழுவதும் 23 லட்சத்து 33 ஆயிரத்து 162 மாணவர்கள் எழுதினார்கள். இதில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 853 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், 'நீட்' தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 920 பேரில், 89 ஆயிரத்து 198 பேர் வெற்றிபெற்றனர். 'நீட்' தேர்வில் மாணவர்களே அதிகம் வெற்றி பெற்றிருந்தாலும், தரவரிசைப்பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வுக்கு தேர்வு பெற்றவர்களில் மாணவிகளே முன்னிலை வகித்தனர். அதாவது, தரவரிசையில் அதிக மதிப்பெண்களை மாணவிகளே பெற்று இருந்தனர்.

மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு 29 ஆயிரத்து 429 பேர் விண்ணப்பித்து, அதில் 28 ஆயிரத்து 819 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தன. இதில் மாணவிகளின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 114, மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 704 ஆகும். ஒரு திருநங்கையின் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆக, மாணவர்களைவிட மாணவிகளே மருத்துவ கலந்தாய்வில் அதிகம் பங்குபெற்றனர். தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 7 இடங்களை பிடித்ததுதான், மாணவர்களுக்கு ஒரேயொரு ஆறுதல். மாணவிகள் 3 பேர் மட்டுமே இடம்பெற்றனர். தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பெற்ற பி.ரஜனீஷ் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2-வது இடத்தை பெற்ற சையது ஆரிப்பின் யூசுப் சென்னையை சேர்ந்தவர்.

எப்போதுமே முதல் 2 இடங்களை மாணவிகளே பெற்றுவந்த நிலையில், இந்த முறை 3-வது இடத்தில்தான் எஸ்.சைலஜா என்ற மாணவி வந்திருந்தார். இந்த ஆண்டு 'நீட்' தேர்வில் நிறைய மதிப்பெண்களை மாணவ-மாணவிகள் பெற்றிருந்ததால், 'கட்-ஆப்' மதிப்பெண் உயர்ந்தது. மொத்தம் 720 மதிப்பெண்களில் 700-க்கு மேல் பெற்றவர்கள் கடந்த ஆண்டு 29 பேர்தான் இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு 90 பேர் பெற்றிருந்தனர். இந்த 90 பேரும் முக்கிய மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்தனர். 650 மதிப்பெண்களுக்கு மேல் கடந்த ஆண்டு 379 பேர் பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 1,446 பேர் பெற்றனர். இது கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகம்.

அதே போலத்தான் 600 மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 1,538 என்று இருந்த நிலையில், இந்த ஆண்டு 4,729 ஆக உயர்ந்து இருந்தது. இது கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகமாகும். அதிக மதிப்பெண் பெற்றவர்களில் பெரும்பாலானோர் 2 அல்லது அதற்குமேல் நீட் தேர்வை எழுதியவர்களாக (ரிபீட்டர்ஸ்) இருந்தனர். கலந்தாய்வை பொறுத்தவரையில், ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக நடந்து முடிந்துள்ள நிலையில், நீட் தேர்வை 2 அல்லது அதற்கு மேல் எழுதி அதிக மதிப்பெண் பெற்றவர்கள்தான் மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கையில் பெரும்பாலான இடங்களை எடுத்திருக்கின்றனர். மொத்தத்தில் மாணவிகளே மருத்துவக் கல்லூரிகளில் அதிக இடங்களை பெற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்