சினிமா உலகை உலுக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை!

பல நடிகைகள் கடந்த காலங்களில்தான் பாலியல் அத்துமீறல்கள் இருந்ததாக புகார் கூறுகிறார்கள்.

Update: 2024-09-06 01:08 GMT

சென்னை,

அதிசயங்கள் அள்ளித் தெளிக்கப்பட்ட வானத்தில், நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருக்கின்றன. அதற்கு மத்தியில், அழகிய நிலவும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், அறிவியல் ஆய்வுகளின்படி, நட்சத்திரங்கள் மின்னுவதில்லை, நிலவு அழகாக இருப்பதில்லை என்ற உண்மை வெளிவந்திருக்கின்றன. அதுபோலத்தான் திரையுலகில் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் கலைஞர்களின் வாழ்க்கையும்கூட.

"சினிமா உலகின் கவர்ச்சி வெளிப்புறத்தில்தான் இருக்கிறது. ஆனால், அதன்மேல் படர்ந்துள்ள கருமேகங்கள் வெளியுலகத்துக்கு மறைக்கப்பட்டுள்ளது. பலருடைய கண்ணீர் கதைகளை கேட்கும்போது, பிரச்சினை பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் இருக்கிறது. ஆனால், சினிமா தொழிலில் அவையெல்லாம் வெளியே கேட்காத அளவுக்கு அடக்கிவைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களின் துயரங்கள், வேதனைகளுக்கு ஒரு தீர்வு காணப்படாமல் அங்கேயே செத்து மடிந்துவிடுகின்றன", இதுதான் தற்போது மலையாள சினிமா உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கையின் முதல் பத்தியாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள நடிகர் திலீப், நடிகை ஒருவரை கடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்ட பிறகு நடிகைகளுக்காக, சினிமாவிலுள்ள பெண்களுக்கான கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பு தொடங்கப்பட்டது. இதில், நடிகைகள் ரேவதி, பார்வதி, ரம்யா நம்பீசன், மஞ்சு வாரியர், படத்தொகுப்பாளர் பீனா, இயக்குனர் அஞ்சலிமேனன் உள்பட முக்கியமானோர் இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில்தான், கேரள அரசாங்கம் 2017-ல் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் சுரண்டல்களை ஆராய ஓய்வுபெற்ற கேரள ஐகோர்ட்டு நீதிபதி ஹேமா தலைமையில், மூத்த நடிகை சாரதா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.பி.வல்சலாகுமாரி ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட ஒரு கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி விரிவாக விசாரணை நடத்தி கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இவ்வளவு காலம் வெளிவராத அந்த அறிக்கை, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரப்பட்டதாலும், கோர்ட்டு தீர்ப்பின் எதிரொலியாலும் வெளியுலகத்துக்கு தெரிந்தது.

கோர்ட்டு தீர்ப்பில், தனி நபர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று கூறப்பட்டுள்ளதால், 89 பக்கங்களை நீக்கித்தான் 295 பக்க அறிக்கையாக அரசு வெளியிட்டுள்ளது. இதன் எதிரொலியாக, 'அம்மா' என்ற பெயரிலுள்ள மலையாள சினிமா நடிகர்கள் சங்க தலைவரான மோகன்லால் உள்பட நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துவிட்டனர். தெலுங்கு சினிமாவிலும் இதுபோல் 2019-ல் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை வெளியிடவேண்டும் என்று நடிகைகள் போர்க்குரல் எழுப்பியுள்ளனர். இப்போது, கன்னட சினிமாவிலும் நடந்த பாலியல் தொந்தரவு பற்றி விசாரிக்க நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வலியுறுத்தி அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு 153 நடிகர்-நடிகைகள் கடிதம் எழுதியுள்ளனர். முன்னெச்சரிக்கையாக, தமிழ் சினிமாவிலும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரித்துள்ளது.

இப்போது, பல நடிகைகள் கடந்த காலங்களில்தான் பாலியல் அத்துமீறல்கள் இருந்ததாக புகார் கூறுகிறார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனையளிக்கும் வலுவான சட்டங்கள் எப்போதும் நடைமுறையில் இருக்கும்போது, ஏன் அப்போதே சட்டத்தின் கதவை அவர்கள் தட்டவில்லை என்ற விமர்சனமும் வருகிறது.

ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் உள்பட இதுவரை 20 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கைகளை கேரளா, தெலுங்கானா அரசுகள் முழுமையாக நிறைவேற்றுமா?, பகுதியாக நிறைவேற்றுமா? அல்லது நிராகரிக்குமா? என்பது போகபோகத்தான் தெரியும்.

Tags:    

மேலும் செய்திகள்