ஆசிய தடகள போட்டியில் சாதித்த ‘தங்க மங்கை’ கோமதி இன்று தாயகம் திரும்புகிறார்

ஆசிய தடகள போட்டியில் சாதித்த ‘தங்க மங்கை’ கோமதி இன்று தாயகம் திரும்புகிறார்

Update: 2019-04-24 22:15 GMT
ஆசிய தடகளத்தில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை கோமதி, திருச்சி அருகே உள்ள முடிகண்டம் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தையான விவசாய கூலித்தொழிலாளி மாரிமுத்து கடந்த 2016-ம் ஆண்டு இறந்துவிட்டார். தாயார் ராஜாத்தி, அண்ணன் சுப்பிரமணி ஆகியோருடன் வசித்து வரும் கோமதி ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். சாதனைக்கு வறுமை ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் 30 வயதான கோமதி சர்வதேச போட்டியில் முதல் தங்கப்பதக்கம் கைப்பற்றி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து இருக்கிறார். ‘தங்க மங்கை’ கோமதி தோகாவில் இருந்து இன்று டெல்லி திரும்புகிறார். அதன் பிறகு அங்கிருந்து பெங்களூரு செல்லும் அவர் பின்னர் சொந்த ஊரான திருச்சிக்கு வருகிறார். அவருக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க உள்ளூர் மக்கள் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள். கோமதி, பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்