பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் - ஜூடோவில் வெண்கலம் வென்றார் கபில் பர்மார்

பாரா ஜூடோ போட்டியில் இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கலப் பதக்கம் வென்றார்.

Update: 2024-09-05 15:55 GMT

image courtesy: Kiren Rijiju twitter

பாரீஸ்,

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் தொடர் வருகிற 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடரில் இந்தியா இதுவரை 24 பதக்கங்களை வென்றிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்கள் பாரா ஜூடோவில் 60 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்காக நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் கபில் பர்மார் பிரேசில் நாட்டின் எலிடன் டி ஒலிவெய்ராவை எதிர்த்து விளையாடினார்.

இந்த போட்டியில் கபில் பர்மார் 10-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். பாரா ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் பாரா ஜூடோவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். இந்தியா தற்போது 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என 25 பதக்கங்கள் பெற்று பதக்கப் பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்