கேப்டன் பதவியிலிருந்து ரோகித்தை நீக்கியது ஏன்..? - மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் விளக்கம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.;

Update:2024-02-06 16:13 IST

Image Courtesy: ANI

மும்பை,

2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் சீசன் தொடங்குவதற்கு முன்பே பல சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜாம்பவான் கேப்டனாக கருதப்படும் ரோகித் சர்மா அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டகுடார். மேலும், குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாண்ட்யா மும்பை அணிக்கு திரும்பியது மட்டுமின்றி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து பயிற்சியாளர் மார்க் பவுச்சர் முதல் முறையாக விளக்கம் அளித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இது முழுக்க முழுக்க கிரிக்கெட்டை வைத்து எடுக்கப்பட்ட முடிவு. ஹர்திக் பாண்ட்யாவை முதலில் ஒரு வீரராக நாங்கள் வாங்க நினைத்தோம். தற்போது அணி மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் தான் நாங்கள் இருக்கிறோம்.

இந்தியாவில் பல ரசிகர்கள் இதனை ஏற்றுக் கொள்ளாமல் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக இந்த உணர்ச்சிவசத்தை எல்லாம் தள்ளி வைத்துப் பார்த்தால் இதற்கு பின்னால் இருக்கும் கிரிக்கெட் தொடர்பான முடிவை ஏன் நாங்கள் எடுத்தோம் என்று உங்களுக்கு கண்டிப்பாக புரியும். தற்போது கேப்டனாக இல்லாமல் வெறும் ஒரு வீரராக ரோகித் சர்மா விளையாடினால் அவரின் பல திறமைகள் பேட்டிங்கில் நிச்சயம் வெளிப்படும்.

ரோகித் தற்போது களத்திற்கு சென்று எந்த நெருக்கடியும் இல்லாமல் மகிழ்ச்சியாக ரன்களை சேர்க்க வேண்டும். அதுதான் முக்கியம். ரோகித் சர்மா ஒரு மிக சிறந்த நபர். மேலும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல ஆண்டு காலம் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து இருக்கிறார். மேலும் அவர் இந்திய அணிக்காக அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் தலைமை தாங்குகிறார். அவர் எங்கு சென்றாலும் அவரை கேமரா பின் தொடர்ந்து வருகிறது. அந்த அளவுக்கு அவர் பிசியாக இருக்கிறார்.

கடந்த இரண்டு சீசன்களாக அவர் போட்டிகளில் சரியாக ஜொலிக்கவில்லை. ஆனால் கேப்டனாக நன்றாகவே செயல்பட்டு இருக்கிறார். இதனால்தான் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் இணைந்து ரோகித் சர்மாவை சாதாரண வீரராக களமிறக்கினால் அது பேட்டிங்கில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்பாக இருக்கும் என்று எண்ணினோம்.

ரோகித் சர்மா ஒரு பேட்ஸ்மனாக எங்களது அணிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுப்பார். கேப்டன் என்ற எந்த நெருக்கடியும் இல்லாமல் அவர் களத்தில் சாதாரண வீரராக விளையாடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்