காயம் காரணமாக இங்கிலாந்து, நியூசிலாந்து டெஸ்ட் தொடர்களை தவறவிடும் ஷாகீன் அப்ரிடி?
உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அப்ரிடிக்கு மீண்டும் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
கராச்சி,
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி. இவருக்கு இலங்கைக்கு எதிரான டெஸ்ட போட்டியில் விளையாடும்போது, வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆசிய கோப்பை உள்ளிட்ட முக்கிய தொடர்களில் விளையாடவில்லை. நேரடியாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றார். தொடக்கத்தில் அவருக்கு ரிதம் சரியான அளவில் கிடைக்கவில்லை. அதன்பின் சிறப்பாக பந்து வீச தொடங்கினார்.
இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியபோது எதிர்பாராத விதமாக அப்ரிடிக்கு மீண்டும் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு பந்து வீச வந்தார். ஆனால் அவரால் பந்து வீச முடியவில்லை. ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
ஷாகீன் அப்ரிடி காயம் குறித்து முழுமையாக மதிப்பிட்டு அணியில் சேர்ப்பதற்கு மேலும் சில நாட்கள் ஆகும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் முதல் ஜனவரி வரை இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இந்த நிலையில் இந்த தொடர்களில் காயம் காரணமாக சொந்த மண்ணில் தலைசிறந்த அணிகளுக்கு எதிராக விளையாட முடியாத நிலை ஷாகீன் அப்ரிடிக்கு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை ஷாகீன் அப்ரிடி அணியில் இடம் பிடிக்கவில்லை என்றால், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராப் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.