அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் திருவிளக்கு வழிபாடு

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை வந்தாலும், ஆடி வெள்ளிக் கிழமைகளும், தை வெள்ளிக் கிழமைகளும் சிறப்புக்குரிய நாட்களாக பார்க்கப்படுகிறது.

Update: 2024-07-23 05:29 GMT

சப்த ரிஷிகளில் முக்கியமானவர் பிருகு முனிவர். ஒரு முறை 'மும்மூர்த்திகளில் யார் மிகச் சிறந்தவர்?' என்ற விவாதம் தேவர்களுக்கு இடையே ஏற்பட்டது. அப்போது தேவர்கள் அனைவரும் இதுபற்றி பிருகு முனிவரிடம் கேட்டனர். அவரோ நேராக பிரம்மலோகம் சென்றார். அங்கிருந்து பிரம்மனை நோக்கி, நீர் ஒரு பொய்யர். ஈசனின் திருமுடியை கண்டதாக பொய் கூறினீரே" என்று பலவிதமாக கேலி பேசினார். அதைக் கேட்டு பிரம்மன் வெகுண்டு எழ, அவரது கோபத்தை தாங்க முடியாமல் அங்கிருந்து கயிலாயம் சென்றார், பிருகு முனிவர்.

கயிலாயத்தில் சிவபெருமானை சந்தித்த அவர், "உன்னை எல்லோரும் உலகிற்கெல்லாம் படியளக்கும் ஈசன் என்கிறார்கள். ஆனால் நீயோ பார்வதி தேவியின் சக்திக்கு உட்பட்டவர்" என்றார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், தன்னுடைய நெற்றிக் கண்ணை திறக்க, அங்கிருந்தும் தப்பித்து வைகுண்டம் வந்தடைந்தார், பிருகு முனிவர். அங்கு விஷ்ணு யோக நித்திரையில் இருந்தார்.

அதைக் கண்ட பிருகு முனிவர், "உன் இல்லத்திற்கு வந்த (வைகுண்டத்திற்கு) விருந்தினரை கவனிக்காமல் இப்படி தூங்குவது சரியா? நீ இப்படி தூங்கிக் கொண்டிருந்தால் உலகத்தை எப்படி பரிபாலனம் செய்ய முடியும்?" எனக் கூறி மகாவிஷ்ணுவின் மார்பில் உதைத்தார். இதைக் கண்டு எழுந்த மகாவிஷ்ணு, "நீங்கள் பெரிய முனிவர். நான் உங்களுக்கு தகுந்த மரியாதை அளிக்க தவறிவிட்டேன். என் மார்பில் உதைத்ததால், உங்கள் கால் வலிக்குமே" என்று கூறி, பிருகு முனிவரின் காலை பிடித்துவிட்டார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் தேவலோகம் சென்ற பிருகு முனிவர், அங்கிருந்த தேவர்களிடம், "மும்மூர்த்திகளில் மகாவிஷ்ணுவே உயர்ந்தவர். நான் காலால் உதைத்த போதிலும், மிகப் பொறுமையாக அந்தப் பிரச்சினையை கையாண்டதால் அவரே உயர்ந்தவர்" எனக் கூறினார். (இதில் பிருகு முனிவரின் காலில் ஒரு கண் இருந்ததாகவும், அந்தக் காலை பிடித்து விடுவது போல், அந்தக் கண்ணை மகாவிஷ்ணு பிடுங்கி விட்டதாகவும் ஒரு சிலர் சொல்வர்). அதே நேரத்தில் மகாவிஷ்ணுவின் மார்பில் மகாலட்சுமி வசிப்பதால், மகாலட்சுமியை உதைத்த தோஷம் பிருகு முனிவருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து பிருகு முனிவர், மகாலட்சுமி தாயாரிடம் "நான் செய்த இந்த பெரும் பாவத்தை பொறுத்து, என்னை மன்னித்து அருள் செய்ய வேண்டும்" என்று வேண்டினார். அதற்கு மகாலட்சுமி, "நான் உனக்கு குழந்தையாகப் பிறந்து, என் கால்களால் உன்னை உதைப்பேன். அப்போது உன் பாவம் நீங்கும், கவலைப்படாதே" என்று கூறினார். அதன்படியே மகாலட்சுமி தாயார், பிருகு முனிவருக்கு மகளாக பிறந்ததாகவும் புராணங்கள் சொல்கின்றன.

மகாலட்சுமி அவதாரம்

மகாலட்சுமி, பாற்கடலில் இருந்து தோன்றியவர். அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைவது என்று முடிவெடுத்தனர். கிடைக்கும் அமிர்தத்தை இருவரும் சமமாக பங்கிட்டுக் கொள்வது என்றும் தீர்மானித்தனர். பாற்கடலை கடைவதற்கு மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் பயன்படுத்தினர். வாசுகி பாம்பின் தலை பக்கத்தை அசுரர்களும், வால் பக்கத்தை தேவர்களும் பிடித்துக் கொண்டனர். ஆனால் மந்தார மலை, பாற்கடலில் நிற்காமல் சரியத் தொடங்கியது. அப்போது மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து மலையை தன்னுடைய முதுகில் தாங்கினார்.

அப்படி மந்தார மலையை கடையும்போது முதலில் வெளிவந்தது ஆலகாலம் என்னும் விஷம். இந்த விஷத்தின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் அனைத்து ஜீவராசிகளும் தவித்தன. அந்த விஷத்தை, சிவபெருமான் உண்டார். அந்த விஷம் அவரது கழுத்தில் நின்றதால், அவர் நீலகண்டர் ஆனார். இதற்கு பின் ஐராவதம் என்ற வெள்ளை யானை வெளிவந்தது. அதை இந்திரன் எடுத்துக் கொண்டான். ஐராவதத்திற்கு பின் சந்திரன், காமதேனு, கற்பகத் தரு, மகாலட்சுமி, அமிர்த கலசத்துடன் தன்வந்திரி இப்படி ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்தது.

அப்படி வெளிவந்த மகாலட்சுமி, மகாவிஷ்ணுவின் இதயத்தில் சரணடைந்தாள். இந்த மகாலட்சுமி சகலவிதமான செல்வத்திற்கும் அதிதேவதையாக விளங்கினாள். இந்த மகாலட்சுமியை யார் பூஜிக்கிறார்களோ, அவர்களுக்கு தரித்திரங்கள் விலகும்.

ஆதிசங்கரர், ஒரு ஏழையின் வறுமையைப் போக்குவதற்காக மகாலட்சுமியின் மீது கனகதாரா துதியை பாடியதன் காரணமாக, அந்த வீட்டின் மீது நெல்லிக்கனி வடிவில் தங்க மழை பொழிந்தது

மகாலட்சுமியை வழிபட பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் உகந்தது. இந்த நாட்களில் திருவிளக்கு பூஜை செய்வதால், மகாலட்சுமியின் அருளைப் பெறலாம். வாரம் தோறும் வெள்ளிக்கிழமை வந்தாலும், ஆடி வெள்ளிக் கிழமைகளும், தை வெள்ளிக் கிழமைகளும் சிறப்புக்குரிய நாட்களாக பார்க்கப்படுகிறது. இந்த நாட்களில் திருவிளக்குப் பூஜை செய்து மகாலட்சுமியை வணங்கினால், நிறைந்த செல்வமும், மாங்கல்ய பாக்கியமும் கிடைக்கும். மேலும் கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். மகாலட்சுமியை 'ஷோடச லட்சுமி' என்று 16 வகையான லட்சுமிகளாக வழிபடும் வழக்கமும் உள்ளது.

தீபம், பூரண கும்பம், மஞ் சள், குங்குமம், ஸ்ரீ சூரணம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, கோலம், ஸ்வஸ்திகா சின்னம், யானை, கண்ணாடி ஆகியவற்றில் மகாலட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. திருவிளக்குப் பூஜை செய்வதற்கு வாழை இலை, வெற்றிலை, பாக்கு, பழம், அவல், பொரி, கற்கண்டு, திருநீறு, குங்குமம், சந்தனம், உதிரிப்பூ, ஊதுவத்தி, துளசி, கற்பூரம், கலச நீர், அரிசி, மஞ்சள், எண்ணெய், திரி, விளக்கு போன்ற பொருட்கள் தேவைப்படும். மகாலட்சுமியை வழிபாடு செய்வதால், ராஜ பதவி, மக்கட் செல்வம், சுற்றம், பொன், நவரத்தினங்கள், நெல் முதலான தானியங்கள், பல்லக்கு, பணியாட்கள் ஆகிய அஷ்ட ஐஸ்வரியங்கள் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

Tags:    

மேலும் செய்திகள்