குலசை தசரா திருவிழா: விரத முறைகளும்... வேடங்களின் பலன்களும்
இந்த வருட தசரா திருவிழாவுக்காக பக்தர்கள் ஏற்கனவே மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கி விட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இங்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு தசரா திருவிழா வரும் அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
மைசூரு தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக, தசரா திருவிழா கொண்டாப்படுவது இங்குதான். இங்கு அருள்பாலிக்கும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குலசை நோக்கி படையெடுத்து வருவர். பொதுவாக சிவன் சன்னதி தனியாகவும், அம்மன் சன்னதி தனியாகவும்தான் கோவிலில் இருக்கும். ஆனால் குலசையில் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் உடன் ஒரே பீடத்தில் இருந்து வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
தசரா திருவிழாவை முன்னிட்டு, காளி, முருகன், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, அம்மன் உள்ளிட்ட வேடங்களை அணிவதற்காக பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து வருகின்றனர். இந்த திருவிழாவில் பக்தர்கள் காளி, அம்மன், சிவன், கிருஷ்ணா், முருகன், விநாயகர் போன்ற சாமி வேடங்கள் மற்றும் குறவன், குறத்தி, போலீஸ், குரங்கு, கரடி, சிங்கம், புலி போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
விரத முறைகள்:
காளி வேடம் அணிபவர்கள் 41 நாள்களுக்கு மேலாக விரதம் இருக்க தொடங்குவார்கள். அவர்கள் வீட்டருகே, குடில் அமைத்து அதில் அம்மனின் புகைப்படம் வைத்து தினமும் பூஜை செய்து அங்கேயே விரதம் இருந்து தங்கி இருப்பர். விரதம் இருக்கும் காலங்களில் காளி வேடம் அணிபவர்கள் தினமும் காலை, மாலை என இரு வேளையிலும் குளித்து, அம்மனுக்கு பூஜை செய்து வழிபடுவர். மேலும் ஒருவேளை சாப்பாடு மட்டுமே சாப்பிட்டு கடும் விரதம் மேற்கொள்வர்.
பிற வேடம் அணிபவர்களும் விரதம் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் மற்ற வேடம் அணிபவர்கள் கொடியேறும் நாள் அன்று மாலை அணிந்து 11 நாள் விரதம் இருப்பர்.
வேடங்களின் பலன்கள்:
இந்த திருவிழாவில் பக்தர்கள் அணியும் ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு பலன்களை முத்தாரம்மன் தருவதாக பக்த்ர்கள் நம்புகின்றனர். முனிவர் வேடமானது முன் ஜென்ம பாவங்களை தீர்ப்பதாகவும், குறவர் வேடமானது நமது மன குறைகளை தீர்க்கும் எனவும், பெண்கள் வேடமானது திருமண குறையை தீர்க்கும் எனவும், காளி வேடம் காரிய சித்தியை தரும் எனவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு பக்தர்களும் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வேடங்களை அணிந்து வருவர். காவல்துறை வேடம் முதல் செவிலியர், மருத்துவர், எமதர்மன் , சித்திர குப்தன் என பல்வேறு வேடங்களை பக்தர்கள் அணிந்து வருவர்.
ஒவ்வொரு வேடம் அணிந்தவர்களும் , அது எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், அருகில் வீடுகளில் யாசகம் பெற்று , அந்த காணிக்கையுடன் சூரசம்காரம் நடக்கும் (10-ம் திருவிழா) நாளன்று கோவில் சென்று தங்கள் வேடத்துடன் அம்மனை தரிசித்து பின்னர் கடலில் சென்று நீராடிவிட்டு வருவர்.
பின்னர் இரவு 10 மணி அளவில் முத்தாரம்மன் எழுந்தருளி, சூரனை வீழ்த்தும் சூரசம்கார நிகழ்வு கடற்கரையில் நிகழும். இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்து இருப்பர். சூரசம்காரம் முடிந்து அம்மன் சன்னதி தேரில் ஊர்வலம் வருவார். அம்மன் சன்னதியை அடைந்த பிறகு காப்பு தரிக்கப்படும். அம்மனுக்கு காப்பு களைந்த பின்னரே, பக்தர்களுக்கு காப்பு களையப்படும். அதன் பிறகே குலசை முத்தாரம்மன் தசரா விரத காலம் நிறைவுபெறும்.