குலசை தசரா திருவிழா: கட்டுப்பாடுகள் விதிப்பு... குழுவினர் கோரிக்கை

இந்த ஆண்டு குலசை தசரா திருவிழா வரும் அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

Update: 2024-09-15 09:28 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இங்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு தசரா திருவிழா வரும் அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இத்திருவிழாவில் பங்கேற்கும் தசரா குழுக்கள் நடந்து கொள்ளும் விதி முறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கோவில் அருகில் உள்ள மண்டபத்தில் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. திருச்செந்தூர் உதவி கலெக்டர் சுகுமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் தமிழகம் முழுவதும் இருந்து 200- க்கும் மேற்பட்ட தசரா குழு தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் சுகுமாறன் பேசுகையில், "பக்தர்களின் வசதிக்காக குடி நீர், கழிப்பறை வசதிகள், மருத்துவ வசதிகள், போக்குவரத்து என அனைத்து வசதிகளும் திட்டமிட்டு சிறப்பாக செய்யப்படும்" என்றார்.

திருச்செந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தராஜன் பேசுகையில், "கடந்த ஆண்டு பக்தர்கள் சிலர் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை கொண்டு வந்தனர். அவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்கள், சாதி அடையாளங்களுடன் வருவோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட தசரா குழுவினர் கூறுகையில், "குலசேகரன்பட்டினம் நகரில் இருந்து கடற்கரைக்கு 11 இணைப்பு ரோடுகள் உள்ளது. இந்த ரோடுகளை சீர் செய்ய வேண்டும் ஆண்டு தோறும் பக்தர்கள் எண்ணிக்கையும், வாகனங்களும் கூடி கொண்டே இருப்பதால் கடற்கரையை விரிவுபடுத்தி பக்தர்கள் தங்குவதற்கும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் கடற்கரையை அரசு தயார் படுத்த வேண்டும" என்று கோரிக்கை வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்