படியளக்கும் பெருமாள்..! ஸ்ரீரங்கத்தில் ஆண்டுக்கு 7 முறை நெல் அளவைத் திருநாள்

நெல் அளவைக்கு உத்தரவு கிடைத்ததும் திருவரங்கம் என சொல்லி முதல் மரக்கால் நெல்லை அளந்து போடுவது வழக்கம்.;

Update:2024-09-15 15:41 IST

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, தை ,மாசி மற்றும் பங்குனி என ஏழு மாதங்களில் நெல் அளவை திருநாள் நடைபெறும். மக்கள் அனைவருக்கும் பகவான் படி அளப்பதை நினைவுபடுத்தும் வகையில் இந்த சிறப்பு வைபவம் நடத்தப்படுகிறது. அவ்வகையில் ஆவணி மாத நெல் அளவை திருநாள் வரும் 20-ம் தேதி நடக்கிறது. பவித்ரோற்சவத்தின் 7-ம் நாளான அன்றைய தினம், நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் கோவில் கொட்டாரத்தில் நெல் அளவை கண்டருளுகிறார்.

நெல் அளவைத் திருநாள் அன்று கருவறையில் இருந்து ஸ்ரீதேவி பூதேவி துணைவராகக் கிளம்புகிறார் நம்பெருமாள். இந்தப் பட்டத்துக்கு தானிய வரவு எவ்வளவு? செலவு எவ்வளவு? மீதி இருப்பு எவ்வளவு? என்று கணக்கிட்டுப் பார்ப்பதற்காக நம்பெருமாள் புறப்படுவார். கணவரின் சரிபாதியாக மனைவி கருதப்படுகிறாள். எனவே, மனைவிக்கு எல்லா விஷயமும் தெரிந்திருக்க வேண்டும், தம்பதிகளிடையே எந்த ஒளிவு மறைவும் கூடாது என்று மக்களுக்கு உணர்த்துவதற்காக தேவியர் இருவரையும் உடன் அழைத்து வருகிறார் நம்பெருமாள். இதுதவிர, தானிய அளவையின்போது தானிய லட்சுமி துணை வரவேண்டும் என்பதும் முக்கியம்.

பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம் அணிந்து ஸ்ரீதேவி பூதேவியர் பட்டாடை உடுத்தி உடன் வர, பக்தர்கள் புடைசூழ வெளிப்பிரகாரமான ராஜ மகேந்திரன் திருச்சுற்றில் பவனி வருவார் நம்பெருமாள். ஆரியபட்டாள் வாசல் வழியே வந்து செங்கமலத் தாயார் சன்னிதி எனப்படும் திருக்கொட்டாரம் முன்பு நாலு கால் மண்டபத்தில் எழுந்தருள்வார். அப்போது பாசிப்பயறும் பானகமும் நைவேத்தியமாகப் படைக்கப்படும். செங்கமலத் தாயார் சன்னிதி பூஜை பரிச்சாரகம் செய்பவர் ஒரு தட்டில் வெற்றிலைப் பாக்கு வைத்து நம் பெருமாளை எதிர் சென்று வணங்கி வரவேற்பார். அவருக்கு மரியாதை செய்யப்படும்.

பின்னர், பெருமாள் அருகில் இருக்கும் ஸ்தானிகர் அருளிப்பாடி, கார் அளப்பான் எனப்படும் அளவைக்காரரை அழைப்பார். ஸ்தானிகர் குரல் கேட்டு, 'ஆயிந்தேன் ஆயிந்தேன்' எனச் சொல்லி விரைந்து சென்று பெருமாள் முன்பு மிகப் பணிவாக நிற்பார் அளவைக்காரர். அவருக்கு தீர்த்தம், சந்தனம், மஞ்சள்பொடி அளித்து பரிவட்டம் கட்டி சடாரி சாத்தி மரியாதை செய்யப்படும். பெருமாளின் பாதமான சடாரி சாத்தினாலே அளவைக்காரருக்கு உத்தரவு வந்துவிட்டது என்று பொருள். சடாரி சாத்தியதும் அளவைக்காரர் பித்தளை மரக்கால் கொண்டு தானியத்தை அளக்கத் தொடங்குவார்.

முதலில், திருவரங்கம் என சொல்லி முதல் மரக்கால் நெல்லை அளந்து போடுவது வழக்கம். அடுத்து பெரிய கோவில் எனக்கூறி இரண்டாவது மரக்கால் நெல்லை அளந்து போடுவார். அதன் பின்னர் வரிசையாக மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என அளக்கப்படும். ஒன்பது என அளக்கும்போது எங்கிருந்தோ அசரீரியாக ஒரு குரல் கேட்கும். 'நிரவி விட்டு அள' என்று ஸ்தானிகர்தான் குரல் கொடுப்பார். இதன்மூலம், 'சரியாக அளந்து போடு' என்று பெருமாளே கட்டளையிடுவதாக ஐதீகம். தனது நேரடிப் பார்வையில் நெல் அளவை கண்டபின் நம்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் இணைந்து பூந்தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார்.

Tags:    

மேலும் செய்திகள்