ரஷிய அதிபர் புதின் 24 ஆண்டுகளுக்கு பின் வடகொரியாவுக்கு பயணம்

உக்ரைன் மீது நடத்தப்படும் போரை தொடர வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை பெற வேண்டிய தேவை ரஷியாவுக்கு உள்ளது.

Update: 2024-06-18 20:56 GMT

வாஷிங்டன்,

ரஷிய அதிபர் புதின் வடகொரியாவுக்கு இன்று காலை (அந்நாட்டு உள்ளூர் நேரப்படி) சென்று சேர்ந்துள்ளார். 24 ஆண்டுகளில் முதன்முறையாக புதினின் இந்த பயணம் அமைந்துள்ளது. அவர் அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் அன்னை நேரில் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று சி.என்.என். செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

2022-ம் ஆண்டு உக்ரைன் மீது படையெடுத்த பின்னர், வெளிநாட்டுக்கு புதின் மேற்கொள்ளும் அரிய சுற்றுப்பயணம் இதுவாகும்.

இதேபோன்று, கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர், மற்றொரு உலக தலைவரை இதுவரை கிம் அழைத்து பேசியதில்லை. இந்த சூழலில் இவர்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறும் என கூறப்படுகிறது.

உக்ரைன் மீது நடத்தப்படும் போரில் வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை பெற வேண்டிய தேவை ரஷியாவுக்கு உள்ளது. அந்த வகையிலும் புதினின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில், வடகொரியாவுக்கு வரும்படி புதினை கிம் அழைத்திருந்த நிலையில், புதினின் இந்த பயணம் அமைந்துள்ளது. கடைசியாக, 2000-ம் ஆண்டு ஜூலையில், வடகொரியாவுக்கு புதின் பயணம் மேற்கொண்டார்.

இந்த பயணம் ஆனது, இரு நாடுகளின் நட்புறவை ஆழப்படுத்தும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இரு நாட்டு தலைவர்களும் புதிய ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிட்டு உள்ளனர் என்று புதினின் உதவியாளர் யூரி உஷாகோவ், கடந்த திங்கட்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்