வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-26 04:09 GMT

சியோல்,

அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென்கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.

இதனிடையே, கொரிய தீபகற்பத்தில் தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இதற்காக அமெரிக்க விமானம் தாங்கிய போர் கப்பல் கொரிய தீபகற்பத்தின் கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, வடகொரியா, தென்கொரியா இடையே சமீபகாலமாக பலூன் மூலமான மோதலும் ஏற்பட்டு வருகிறது. தென்கொரியாவில் இருந்து வடகொரிய அரசுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இதற்கு பதிலடியாக தென்கொரியாவுக்குள் பலூன் மூலம் குப்பைகளை வடகொரியா வீசியது.

இந்நிலையில், வடகொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. வடகொரியா ஏவிய ஏவுகணை கடலில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்