திடீரென பறந்து வந்து விழுந்த குப்பை பலூன்... விமான நிலையத்தை மூடிய தென் கொரியா

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 100 பலூன்கள் தென் கொரியாவுக்குள் விழுந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

Update: 2024-06-26 06:18 GMT

சியோல்:

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.

சமீப காலமாக பலூன்கள் மூலம் தென் கொரியாவிற்குள் குப்பைகளை வீசுகிறது. சிகரெட் துண்டுகள், வெற்று காகிதங்கள், கிழிந்த துணிகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற குப்பைகள் அடங்கிய ஏராளமான பலூன்களை தென்கொரியாவிற்குள் அனுப்பி உள்ளது.

வடகொரியாவிற்கு எதிரான வாசகங்களுடன் தென்கொரியாவில் இருந்து வீசப்பட்ட காகிதங்களுக்கு பதிலடியாக இந்த பலூன்கள் வீசப்பட்டதாக வடகொரியா தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வட கொரியாவில் இருந்து இன்று மீண்டும் குப்பை பலூன்கள் தென் கொரியா நோக்கி அனுப்பப்பட்டன. இந்த பலூன்களில் ஒரு பலூன், தென் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முனையம் அருகே விமானங்கள் நிறுத்தப்படும் பகுதியில் விழுந்தது. மேலும் பல பலூன்கள் விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே பறந்துகொண்டிருந்தன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் மூடப்பட்டது. ஓடுபாதையில் எந்த விமானமும் தரையிறக்க அனுமதிக்கப்படவில்லை. எந்த விமானமும் புறப்பட்டுச் செல்லவில்லை. மூன்று மணி நேரத்திற்கு பிறகு நிலைமை சரியானதும், விமான சேவை தொடங்கியது.

நள்ளிரவு 1:46 மணி முதல் அதிகாலை 4:44 மணி வரை உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்குவதில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் ஓடுபாதைகள் மீண்டும் திறக்கப்பட்டு விமான சேவை தொடங்கியதாகவும் இன்சியான் சர்வதேச விமான நிலைய கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் வட கொரியாவில் இருந்து வந்த சுமார் 100 பலூன்கள் தென் கொரியாவுக்குள் விழுந்ததாக ராணுவம் இன்று கூறியது. பெரும்பாலும் தலைநகர் சியோல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கியோங்கி மாகாணத்தில் விழுந்ததாகவும், அவற்றில் பெரும்பாலான பலூன்களில் பழைய பேப்பர் துண்டுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்